Breaking News
26 மணிநேர ‘கவுண்ட்டவுன்’ தொடங்கியது ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) உயர்தொழில்நுட்பத்தில் ஜிசாட்-29 என்ற செயற்கைகோளை தயாரித்துள்ளது. இந்த செயற்கைகோள் இன்று (புதன்கிழமை) மாலை 5.08 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது.

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:- ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் 67-வது ராக்கெட் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 -டி2 ஆகும். தகவல் தொடர்புக்காக இஸ்ரோ தயாரித்த 33-வது செயற்கைகோள் ஜிசாட்-29 இதில் பொருத்தப்பட்டு உள்ளது. 2-வது ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் 33-வது ராக்கெட் மற்றும் இந்த ஆண்டு ஏவப்படும் 5-வது ராக்கெட் இதுவாகும்.

ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் திட எரிபொருள், திரவ எரிபொருள் மற்றும் கிரையோஜெனிக் என்ஜின் ஆகிய 3 நிலைகளை கொண்ட ராக்கெட்டாகும். இதற்கான இறுதிகட்ட பணியான 26 மணி, 8 நிமிட நேர ‘கவுண்ட் டவுன்’ நேற்று பகல் 2 மணி 50 நிமிடத்தில் தொடங்கியது. இதன் மூலம் ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.

இந்த ராக்கெட்டை வெற்றிகரமாக செலுத்துவதன் மூலம் இஸ்ரோ அடுத்த சாதனைக்கு தயாராகி வருகிறது. கனரக வகையை சேர்ந்த இந்த ராக்கெட் மூலம் சுமார் 10 டன் எடை கொண்ட பொருளை எளிதாக விண்ணுக்கு தூக்கி செல்ல முடியும். ஜிசாட்-29 செயற்கைகோள் 3 ஆயிரத்து 423 கிலோ எடை கொண்டது.

இந்த செயற்கைகோள் தகவல் தொடர்புத்துறையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும். இதற்காக பூமியில் இருந்து சுமார் 36 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் விண்ணில் நிலைநிறுத்த திட்டமிடப்பட்டு உள்ளது’.

வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், ‘கஜா’ புயல் தமிழகத்தில் உள்ள கடலூருக்கும், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே கரையை கடக்கும் என்று அறிவித்து இருந்தனர். பின்னர் புயல் திசை மாறியதால் ராமேசுவரம் அருகில் உள்ள பாம்பனுக்கும் கடலூருக்கும் இடையே கரையை கடக்கும் என்று அறிவித்து உள்ளனர். ராக்கெட்டும், ஏவுதளமும் அனைத்துவிதமான காலநிலையை எதிர்கொள்ளும் சக்தியை கொண்டதால் புயல் பற்றி கவலைப்படவில்லை.

வானம் மேகமூட்டம் இல்லாமல் தெளிவாக இருந்தால், ராக்கெட் விண்ணில் செல்வதை சென்னையில் கண்டு களிக்க முடியும். இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினார்கள்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.