Breaking News
குளிர்கால கூட்டத்தொடர்: டிசம்பர் 11-ந் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், கடந்த ஜூலை மாதம் 18–ந் தேதி தொடங்கியது. அதில் மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம், தெலுங்கு தேசம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளால் கொண்டு வரப்பட்டது. அந்த தீர்மானம் தோல்வி அடைந்தது.

அந்த கூட்டத்தொடர் ஆகஸ்டு மாதம் 10–ந் தேதி முடிந்தது. அதில் 20 மசோதாக்கள், மக்களவையில் நிறைவேறின. இரு அவைகளிலும் கிரிமினல் சட்ட திருத்தம், தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளிகள் மசோதா, திவால் மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் நிறைவேறின.

இந்த நிலையில் அடுத்து குளிர்கால கூட்டத்தொடர் நடக்க உள்ளது. வழக்கமாக இந்த கூட்டத்தொடர் நவம்பர் மாதம் தொடங்கி நடக்கும். ஆனால் கடந்த ஆண்டு டிசம்பரில்தான் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த ஆண்டும் மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலையொட்டி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் மாதம்தான் நடத்தப்படுகிறது.

இது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழு கூட்டம் நேற்று முன்தினம் இரவு, டெல்லியில் நடந்தது. இதில் குளிர்கால கூட்டத்தொடரை அடுத்த மாதம் (டிசம்பர்) 11–ந் தேதி தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தொடரை ஜனவரி மாதம் 8–ந் தேதி வரை நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்த கூட்டத்தொடர் முழுமையான தொடராக இருக்கும்.

5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் டிசம்பர் 11–ந் தேதி வெளியாகின்றன. அதே நாளில்தான் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரும் தொடங்குவதால், அந்த தேர்தல் முடிவுகள் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தும்.
குளிர்கால கூட்டத்தொடர் பற்றி நாடாளுமன்ற விவகாரங்கள் துறை ராஜாங்க மந்திரி விஜய் கோயல் கூறும்போது, ‘‘ இந்த கூட்டத்தொடரில் 20 பணி நாட்கள் இருக்கும். கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவதில் எதிர்க்கட்சிகளின் ஆதரவையும், ஒத்துழைப்பையும் நாடுகிறோம்’’ என குறிப்பிட்டார்.

இந்த கூட்டத்தொடரில், மாநிலங்களவையில் நிலுவையில் உள்ள முத்தலாக் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பாக இருக்கும். இந்திய மருத்துவ கவுன்சில் திருத்த அவசர சட்டம், கம்பெனி திருத்த அவசர சட்டம் ஆகியவற்றுக்கான மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்ற அரசு கவனம் செலுத்தும்.

எல்லாவற்றுக்கும் மேலாக ரபேல் போர் விமான பேர விவகாரம், இந்த குளிர்கால கூட்டத்தொடரில் புயலை கிளப்பும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.