Breaking News
ரபேல் போர் விமான விவகாரம் பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்படுமா? சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு

இந்திய விமானப்படைக்கு பிரான்சு நாட்டிடம் இருந்து ரூ.58 ஆயிரம் கோடிக்கு ரபேல் போர் விமானங்கள் வாங்க கடந்த 2016–ம் ஆண்டு மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது.
ரபேல் போர் விமானங்களுக்கு விலை நிர்ணயம் செய்ததில் தொடங்கி, பிரான்சு நாட்டின் டசால்ட் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்தது வரை ஊழல் நடந்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். ஆனால் இதை மத்திய அரசு மறுத்து உள்ளது. டசால்ட் நிறுவனமும் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என்று கூறி இருக்கிறது.

இந்த நிலையில், இந்த ஊழல் விவகாரம் குறித்து கோர்ட்டு கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி, சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் பிரசாந்த் பூ‌ஷண் உள்ளிட்ட சிலர் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்து இருந்தனர்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில், போர் விமானங்கள் வாங்க மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்த நடைமுறைகள் பற்றிய விவரங்களை நீதிபதிகளிடம் மத்திய அரசு தாக்கல் செய்தது. மேலும் போர் விமானத்தின் விலை விவரம் பற்றிய தகவலை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் வைத்து தாக்கல் செய்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்களில் ஒருவரான சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் பிரசாந்த் பூ‌ஷண் வாதாடுகையில் கூறியதாவது:–

ரபேல் போர் விமானங்கள் வாங்கும் பேரத்தில் நடந்த ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றி விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டின் மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள வி‌ஷயங்களால் இதுபோன்ற ஒரு விசாரணை அவசியம் தேவை என்பது புலனாகிறது. 36 ஜெட் விமானங்கள் வாங்குவதில் டெண்டர் முறைகள் தவிர்க்கப்பட்டு இரு அரசுகளுக்கு இடையில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவது குறித்து ஏப்ரல் 2015–ம் ஆண்டு பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்து உள்ளார். ராணுவ மந்திரிக்கு கூட இந்த ஒப்பந்தம் பற்றி அப்போது தெரிந்து இருக்கவில்லை. ரிலையன்ஸ் நிறுவனத்தை இந்த பேரத்தில் இடம்பெற வைக்கவே இது போன்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

முன்பு 126 ஜெட் விமானங்கள் வாங்குவதாக இருந்தது ஏன் பின்னர் 36 ஆக குறைக்கப்பட்டது? இந்த ஒப்பந்தம் குறித்து அறிவிக்க பிரதமருக்கு என்ன அதிகாரம் உள்ளது? இந்த முடிவை யார் எடுத்தது? ஜெட் விமானங்கள் வாங்குவதை விரைவுபடுத்துவதற்காக 126–ல் இருந்து 36 ஆக குறைத்தோம் என்று மத்திய அரசு கூறுவதை ஏற்க முடியாது. 3 ஆண்டுகள் ஏற்கனவே கடந்துவிட்டன. இதுவரை ஒரு ஜெட் விமானம் கூட வந்து இங்கு சேரவில்லை.
டசால்ட் நிறுவனத்துக்கு உதவி செய்யும் வகையில் அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து இருக்கிறார்கள். இந்த துறையில் எந்த அனுபவமும் இல்லாத ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு கமி‌ஷன் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே, ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் நடவடிக்கை தேவைப்படுகிறது. நாங்கள் தாக்கல் செய்த புகார்களை சி.பி.ஐ. விசாரிக்க மறுக்கிறது. எனவே உரிய நடவடிக்கை எடுக்குமாறு சி.பி.ஐ நிறுவனத்தை சுப்ரீம் கோர்ட்டு வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு பிரசாந்த் பூ‌ஷண் கூறினார்.

அருண் ஷோரி வாதாடுகையில், ‘‘மத்திய அரசின் நெருக்கடி இல்லாமல், 1929–ல் தொடங்கப்பட்ட டசால்ட் நிறுவனம் இந்த துறையில் எந்த அனுபவமும் இல்லாத ரிலையன்ஸ் நிறுவனத்தை தங்கள் கூட்டாளியாக ஏற்றுக்கொள்ள முன்வந்திருக்காது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் தங்களின் பொருளாதார நெருக்கடியை தீர்த்து கொண்டு உள்ளது டசால்ட் நிறுவனம்.
அரசாங்கம் இப்போது எச்.ஏ.எல். நிறுவனத்தின் திறன் பற்றி கேள்வி எழுப்பி உள்ளது. திறன் ஏதும் இல்லாமலா அந்த நிறுவனம் சுகோய் போர் விமானங்களை தயாரித்து உள்ளது? சுகோய் போர் விமானங்களை தயாரிக்கும் திறன் கொண்ட எச்.ஏ.எல். நிறுவனம் ரபேல் போர் விமானங்களை தயாரிக்க முடியாதா?’’ என்று கேள்வி எழுப்பினார்.

மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் வாதாடுகையில், ‘‘பாதுகாப்புத்துறை தொடர்பான ஒப்பந்தங்கள் குறித்து அத்துறையின் நிபுணர்கள்தான் முடிவெடுக்க முடியும். இதுபோன்ற வி‌ஷயங்கள் இந்த கோர்ட்டின் அதிகாரத்துக்குள் வராது. மேலும் ஊடகங்களில் வெளியான தகவல்கள் மற்றும் வேறுசில ஆவணங்களின் அடிப்படையில் இதுபோன்று விசாரணை நடத்த முடியாது. அந்த ஆவணங்கள் மனுதாரர்களுக்கு எப்படி கிடைத்தது என்பதையும் ஆராய வேண்டும்’’ என்று கூறினார்.
இதற்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தற்போதைக்கு இந்த விமானங்களின் விலை விவரங்கள் கோர்ட்டுக்கு தேவை இல்லை. இந்த விவரங்கள் பொதுவில் இணையத்தில் பதிவேற்ற முடியும் என்று தீர்மானித்த பிறகே இந்த விமானங்களின் விலை பற்றி இங்கே கேள்வி எழுப்ப முடியும் என்று கூறினார். இதற்கு முன்பு வாங்கப்பட்ட போர் விமானங்களின் விலை குறித்து பகிரங்கமாக வெளியிடப்பட்டதா? என்றும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு அட்டார்னி ஜெனரல் எப்போதும் இல்லை என்று பதில் அளித்தார்.

மதிய உணவுக்கு பிறகு மீண்டும் விசாரணை தொடர்ந்தது. அப்போது அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் தனது வாதத்தை தொடர்ந்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களின் அடிப்படையில் போர் விமானங்களை அரசாங்கம் பெற்றது குறித்து இந்த கோர்ட்டு விசாரணை மேற்கொள்ள முடியுமா என்பதை நீதிபதிகள் கேள்விக்கு உட்படுத்த வேண்டும். இந்த ஒப்பந்தம் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது. மத்திய அரசு அதற்கு அடிபணிந்து உடனடியாக அறிக்கையை தாக்கல் செய்தது. அவற்றை மனுதாரர்களும் அறிந்து கொள்ளும் வகையில் இணையத்தில் பதிவேற்ற வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது. அதையும் மத்திய அரசு நிறைவேற்றியது.

இந்தியா–பிரான்சு இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் குறித்து பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்றால் பிரான்சு அரசாங்கத்தின் அனுமதி பெறவேண்டும். இது தொடர்பான விலை விவரங்கள் குறித்து நாடாளுமன்றத்துக்கு கூட முழுமையான தகவல் அளிக்கப்படவில்லை. இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் போர் விமானங்களின் விலை மிகவும் தவறுதலாக குறிப்பிடப்பட்டு உள்ளது. எதிரி நாடுகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதற்காக போர்த்தளவாடங்களின் விலை மற்றும் விவரங்கள் எப்போதுமே ரகசியமாக வைக்கப்படுகின்றன.
நம்முடைய எதிரி நாடுகள் மிகவும் முன்னேற்றம் அடைந்த அதிநவீன ரக போர் தளவாடங்களை விலைக்கு வாங்கி இருக்கின்றன. அந்த நாடுகளுடன் போட்டியிடும் வகையில் அதிக திறன் கொண்ட போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு முடிவெடுத்தது. ரபேல் போர் விமானம் குறித்த ஒப்பந்தம் குறித்த தகவல் தொடர்புள்ள அனைத்து அமைச்சகங்களுக்கும் தெரிவிக்கப்பட்டு அவர்களின் ஒப்புதல் பெற்ற பிறகே முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த ஒப்பந்தம் தொடர்பாக பிரான்சு அரசாங்கம் உத்தரவாதம் எதையும் வழங்கவில்லை. ஆனால் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 போர் விமானங்கள் பெறுவதற்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் ஒரு கடிதத்தை பிரான்சு அரசாங்கம் வழங்கி உள்ளது. ரபேல் விமானம் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் தொழில்நுட்பம் கொண்டது. நாம் கார்கில் போரில் பல உயிர்களை இழந்தோம். எதிர்காலத்தில் அது போன்ற துயரங்கள் நேராமல் இருக்க ரபேல் விமானம் நமக்கு தேவைப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நேற்றுடன் விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

விமானப்படை அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம்

ரபேல் போர் விமான விவகாரம் தொடர்பாக விமானப்படை அதிகாரிகள் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

ரபேல் போர் விமான விவகாரம் தொடர்பான விசாரணை நேற்று நடைபெற்ற போது, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், இந்திய விமானப்படை அதிகாரிகள் ஆஜராகி இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலிடம் கேட்டுக்கொண்டார்.

அதன்படி விமானப்படை துணை தளபதி ஏர் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி, ஏர் மார்ஷல் அனில் கோஸ்லா ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜரானார்கள். அவர்களிடம் விமானப்படை விமானங்கள் தொடர்பாக நீதிபதிகள் விளக்கம் கோரினார்கள்.

நீதிபதிகள் கேள்வி:- விமானப்படையில் தற்போது உள்ள விமானங்களில் எவையேனும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை உள்ளனவா?

விமானப்படை அதிகாரிகள் பதில்:- சுகோய் விமானங்கள் மற்றும் சமீபத்திய 3-ம் தலைமுறை மிக் போர் விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு உள்ளன. இந்தியாவுக்கு 5-ம் தலைமுறை போர் விமானங்கள் தேவைப்படுகின்றன. எனவே, ரபேல் விமானங்கள் வாங்கும் அவசியம் ஏற்பட்டு உள்ளது.

நீதிபதிகள் கேள்வி:- கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் வரை 126 விமானங்கள் வாங்க முடிவு செய்யப்பட்ட பின்னர் அந்த எண்ணிக்கை 36 விமானங்களாக குறைக்கப்பட்டது ஏன்? நம்மிடம் மிகவும் நவீனமான தொழில்நுட்பம் அடங்கிய போர் விமானங்கள் உள்ளனவா?

விமானப்படை அதிகாரிகள் பதில்:- இல்லை. நம்மிடம் உள்ளது 3 மற்றும் 4-வது தலைமுறை விமானங்களே.

நீதிபதிகள் கேள்வி:- எந்தெந்த நாடுகள் ரபேல் போர் விமானங்கள் வாங்க டசால்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளன?

விமானப்படை அதிகாரிகள்:- கத்தார், எகிப்து, இந்தியா, பிரான்ஸ்.

இவ்வாறு அவர்கள் விளக்கம் அளித்தனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.