இங்கிலாந்தில் 4 மந்திரிகள் ராஜினாமா : பிரதமர் தெரசாவுக்கு நெருக்கடி
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகுவது தொடர்பாக 2016–ம் ஆண்டு இங்கிலாந்தில் பொது வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 51.89 சதவீத மக்கள், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலகுவதற்கு ஆதரவாக வாக்களித்தனர். 48.11 சதவீத மக்கள், அந்த முடிவுக்கு எதிராக வாக்களித்தனர்.
பெரும்பான்மையான மக்களின் ஆதரவை அடுத்து ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலக முடிவு எடுத்தது. இது ‘பிரிக்ஸிட்’ என அழைக்கப்படுகிறது.
இதில் உடன்பாடு இல்லாத காரணத்தால் அப்போதைய பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகினார். அதைத் தொடர்ந்து, புதிய பிரதமராக தெரசா மே பதவி ஏற்றார்.
அதைத் தொடர்ந்து அவர் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலகுவதற்கு, அந்த கூட்டமைப்புடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
இப்போது அது தொடர்பாக 585 பக்கங்களைக் கொண்ட ஒரு வரைவு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் பற்றி நேற்று முன்தினம் 5 மணி நேரம் விவாதம் நடத்தி பிரதமர் தெரசா மே தனது மந்திரிசபையின் ஒப்புதலை பெற்றார்.
ஆனாலும் பல மந்திரிகள் இந்த வரைவு ஒப்பந்தத்துக்கு எதிராக பேசியதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த வரைவு ஒப்பந்தம் தொடர்பாக எதிர்க்கட்சியான தொழிற்கட்சி தனது கருத்தை இன்னும் தெரிவிக்கவில்லை.
இந்த ஒப்பந்தத்தை ஐரோப்பிய கூட்டமைப்பும், இங்கிலாந்தும் கூட்டாக வெளியிட்டுள்ளன. அடுத்த மாதம் (டிசம்பர்) இந்த ஒப்பந்தம் தொடர்பாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற வேண்டும். அந்த வாக்கெடுப்பில் ஒருவேளை தெரசா மே தோல்வியை தழுவினால் 21 நாட்களில் புதிய ஒப்பந்தத்தை முன் வைக்க வேண்டும். வெற்றி பெற்று விட்டால், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அந்த மசோதா ஒரு வேளை தோற்றால் சிக்கலாகி விடும். மீண்டும் பொதுத்தேர்தல், வாக்கெடுப்பு என பிரச்சினைகள் நீளும்.
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் மசோதா வெற்றி பெற்றால், அடுத்து ஐரோப்பிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வாக்கெடுப்புக்கு விடப்படும். அங்கு நிறைவேற்றப்பட்டு விட்டால், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 29–ந் தேதி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறி விடும்.
ஆனால் இந்த விவகாரத்தில் இப்போது இங்கிலாந்தில் குழப்பமான சூழல் நிலவுகிறது. வரைவு ஒப்பந்தத்தில் உள்ள அதிருப்தி காரணமாக ஆளும் கன்சர்வேடிவ் கட்சி சார்பிலேயே பிரதமர் தெரசா மேவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர முயற்சி நடந்து வருகிறது.
இதற்கிடையே இங்கிலாந்தில், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது தொடர்பான வரைவு ஒப்பந்த விவகாரத்தில் ஏற்பட்ட அதிருப்தியால் நேற்று 4 மந்திரிகள் ராஜினாமா செய்து விட்டனர்.
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலகுவது தொடர்பான ‘பிரிக்ஸிட்’ துறையை கவனித்து வந்த மந்திரியான டொமினிக் ராப், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.
இது தொடர்பான அறிவிப்பை லண்டனில் நேற்று அவர் வெளியிட்டபோது, ‘‘ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகுவது தொடர்பான வரைவு ஒப்பந்தத்தை ஆதரிக்க என் மனசாட்சி ஒப்புக்கொள்ளவில்லை’’ என கூறினார்.
மேலும் வடக்கு அயர்லாந்துக்கான மந்திரியான இந்திய வம்சாவளி சைலேஷ் வாரா, ‘பிரிக்ஸிட்’ துறை ராஜாங்க மந்திரி சூயல்லா, பணியாளர், ஓய்வூதிய துறை மந்திரி எஸ்தர் மெக்வே ஆகியோரும் பதவி விலகி உள்ளனர்.
இதன் காரணமாக பிரதமர் தெரசா மே நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளார்.