Breaking News
கொச்சி வந்தார் திருப்தி தேசாய்: விமான நிலையத்துக்கு வெளியே கடும் போராட்டம்

கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில், இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி உத்தரவிட்டது. அந்த உத்தரவை பெண்கள் அமைப்புகள் சில வரவேற்றாலும், அய்யப்ப பக்தர்கள் அமைப்புகள், அரசியல் கட்சிகள் எதிர்க்கின்றன.

ஐப்பசி வழிபாட்டுக்காக கடந்த அக்டோபர் மாதம் 17-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடை திறந்திருந்தபோது பெண்கள் வர எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றன. 144 தடை உத்தரவு பிறப்பிக்கிற அளவு நிலைமை மோசமானது. பதற்றம் நிலவியது. பெண் பத்திரிகையாளர்கள் உள்பட பல இளம்பெண்கள் அய்யப்பன் சன்னிதானத்துக்கு 100 மீட்டர் தொலைவில் உள்ள வலியநடை பந்தல் வரை சென்றும், கடும் எதிர்ப்பால் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை உருவானது.

திருவாங்கூர் கடைசி மன்னர் சித்திர திருநாள் பாலராமவர்மாவின் பிறந்த தினத்தையொட்டி கடந்த 5-ந் தேதி நடை திறந்து, 6-ந் தேதி சாத்தப்பட்டபோதும், பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. இதற்கிடையே சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் மறு ஆய்வு மனுக்களை தாக்கல் செய்தனர். அவற்றை விசாரணைக்கு ஏற்றபோதும், முந்தைய உத்தரவுக்கு தடை பிறப்பிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது. இதில் விசாரணை ஜனவரி மாதம் 22-ந் தேதி நடக்க உள்ளது.

இந்த நிலையில் சபரிமலையில் இன்று (16-ந் தேதி) நடை திறக்க உள்ளது. மண்டல பூஜை, மகர விளக்கு வழிபாட்டுக்காக 2 மாதங்கள் கோவில் நடை திறந்திருக்கும். இதையொட்டி போலீஸ் படை குவிக்கப்படுகிறது. மீண்டும் பதற்றம் உருவாகி உள்ளது.

கொச்சி வந்தார் திருப்தி தேசாய்

இதற்கிடையில், பெண்ணியவாதியான திருப்தி தேசய் சபரிமலை கோவிலுக்குள் செல்வேன் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக கேரள முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு திருப்தி தேசாய் கடிதம் எழுதியுள்ளார். அதில், சபரிமலைக்கு ஒரு குழுவினருடன் தான் வர உள்ளதாகவும், அதற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படியும் கேட்டுள்ளார். இதற்காக தனக்கு மிரட்டல்களும் வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சபரிமலை கோவிலுக்கு செல்வதற்காக கொச்சி விமான நிலையத்தில் திருப்தி தேசாய் வந்து இறங்கியுள்ளார். விமான நிலையத்திற்கு வெளியே போராட்டம் நடைபெற்று வருவதால், திருப்தி தேசாய் மற்றும் அவருடன் வந்த குழுவினரை வெளியே செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை.

இந்த நிலையில், திருப்தி தேசாய் சபரிமலை கோவிலுக்குள் செல்ல அனுமதிக்க மாட்டோம் என கேரள பாஜக திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கேரள மாநில பாஜக நிர்வாகி எம்.என்.கோபி இது தொடர்பாக கொச்சி விமான நிலையத்திற்கு வெளியே ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், ” காவல்துறை வாகனம் மூலமாகவோ பிற அரசு வாகனங்கள் மூலமாகவோ திருப்தி தேசாய் விமான நிலையத்தை விட்டு வெளியே செல்ல அனுமதிக்க மாட்டோம். விமான நிலை டாக்ஸிகளும் திருப்தி தேசாயை அழைத்துச்செல்லாது. திருப்தி தேசாய் செல்ல விரும்பினால் தனது சொந்த வாகனத்தில் செல்லட்டும். விமான நிலையத்தை விட்டு திருப்தி தேசாய் வெளியேறினாலும் கூட அவர் செல்லும் இடங்களில் எல்லாம் போராட்டம் நடைபெறும்” என்றார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.