ஜிம்பாப்வேயில் பஸ் தீப்பிடித்தது 42 பேர் பரிதாப சாவு
ஜிம்பாப்வே நாட்டின் ஜாவிஷாவானே நகரத்தில் இருந்து தென் ஆப்பிரிக்காவின் மியூசினா நகருக்கு நேற்று முன்தினம் இரவு ஒரு பஸ் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.
பஸ் அங்குள்ள புலவாயோ-பெயிர்பிரிட்ஜ் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக தீப்பிடித்தது. தீ மளமளவென பஸ் முழுவதும் பரவியது. அதில் பயணம் செய்தவர்கள் தப்பிக்க முடியவில்லை.
இந்த கோர விபத்தில் 42 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கடந்த 2 வாரங்களுக்கு முன்தான் ஜிம்பாப்வேயில் ரூசாபே என்ற இடத்தில் 2 பஸ்கள் நேருக்கு நேர் மோதி நேரிட்ட விபத்தில் 50 பேர் உயிரிழந்தனர். அதன் சுவடு மறைவதற்கு முன் அங்கு மற்றொரு பஸ் தீப்பிடித்து அதில் பயணம் செய்தவர்கள் 42 பேர் பலியாகி இருப்பது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பலியானவர்களின் உடல்கள் எரிந்து சாம்பலாகி விட்டதால் அடையாளம் காண முடியாத சூழல் இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.