பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணியின் வெற்றி தொடருமா? – ஆஸ்திரேலியாவுடன் இன்று மோதல்
பெண்களுக்கான 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. புரோவிடென்சியில் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் ‘பி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, 3 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் தங்கள் பிரிவில் இடம் பிடித்துள்ள நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து ஆகிய அணிகளை வரிசையாக போட்டுத்தாக்கி தோல்வியையே சந்திக்காமல் அரைஇறுதிக்கு முன்னேறி இருக்கின்றன. கடைசி ஆட்டத்திலும் வெற்றியை ருசித்து தங்களது பிரிவில் முதல் இடத்தை பிடிக்க இரு அணிகளும் முனைப்பு காட்டும். மெக் லானிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கில் வலுமிக்கது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி சுழற்பந்து வீச்சில் மிரட்டக்கூடியது. இரு அணியிலும் திறமையான வீராங்கனைகள் அங்கம் வகிப்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இரு அணிகளும் இதுவரை 14 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இந்திய அணி 3 முறையும், ஆஸ்திரேலிய அணி 11 தடவையும் வென்று இருக்கின்றன. இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில், ‘அரைஇறுதியை உறுதி செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இருப்பினும் இன்னும் சில விஷயங்களில் நாங்கள் முன்னேற்றம் காண வேண்டி உள்ளது. ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டும் என்றால் எல்லா நேரமும் ஆக்ரோஷமாக ஆட வேண்டும்’ என்றார்.
இந்திய துணை கேப்டன் மந்தனா கூறுகையில் ‘இந்த போட்டி தொடரில் எல்லா ஆட்டங்களிலும் ஆதிக்கம் செலுத்தி வெற்றி காண வேண்டும் என்பது தான் எங்கள் எண்ணமாகும். அடுத்த ஆட்டத்திலும் எங்களது இந்த மனநிலையில் மாற்றம் இருக்காது. முதல் 2 லீக் ஆட்டங்களில் எங்களது பேட்டிங் சிறப்பாக இருந்தது. அயர்லாந்துக்கு எதிரான 3-வது லீக்கில் பேட்டிங் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை’ என்றார்.
இதற்கிடையே ‘பி’ பிரிவில் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பந்தாடியது.
இதில் நியூசிலாந்து நிர்ணயித்த 145 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி 18 ஓவர்களில் 90 ரன்னில் அடங்கியது. நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள் அமெலியா கெர், ஜெஸ் வாட்கின் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். ஏற்கனவே அரைஇறுதி வாய்ப்பை இழந்து விட்ட நியூசிலாந்துக்கு இது ஆறுதல் வெற்றியாகவே அமைந்தது. பாகிஸ்தான் அணி சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும்.
ரோகித் சர்மா, கோலியை மிஞ்சிய மிதாலிராஜ்
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீராங்கனை மிதாலிராஜ், 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான், அயர்லாந்துக்கு எதிராக அரைசதம் விளாசி அசத்தினார். சர்வதேச 20 ஓவர் போட்டியில் அவர் இதுவரை 80 இன்னிங்சில் பேட்டிங் செய்து 17 அரைசதங்களுடன் 2,283 ரன்கள் குவித்து இருக்கிறார். ஆண்களை விட அவர் அதிக ரன்கள் சேர்த்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் வீரர்களில் அதிகபட்சமாக நியூசிலாந்தின் மார்ட்டின் கப்தில் 2,271 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய வீரர்கள் ரோகித் சர்மா 2,207 ரன்களும், விராட் கோலி 2,102 ரன்களும் எடுத்துள்ளனர். இவர்களை மிதாலிராஜ் தற்போது மிஞ்சினாலும், வீராங்கனைகளின் பட்டியலில் அவர் 4-வது இடம் வகிக்கிறார். நியூசிலாந்து வீராங்கனை சுசி பேட்ஸ் 2,996 ரன்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.
35 வயதான மிதாலிராஜ் கூறுகையில், ‘கடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு அணி நிறைய முன்னேற்றம் கண்டு இருக்கிறது. அணிக்கு வருகை தந்துள்ள இளம் வீராங்கனைகள் 20 ஓவர் போட்டிக்கான அணுகுமுறையை மாற்ற விரும்புகிறார்கள். அவர்களுக்காக இந்த உலக கோப்பையை நிச்சயம் வெல்ல விரும்புகிறேன். பீல்டிங் கட்டுப்பாடு உள்ள ‘பவர்-பிளே’க்குள் அதிகமான பவுண்டரிகள் அடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறேன். இந்திய அணிக்காக தொடர்ந்து ரன்கள் குவிப்பேன் என்று நம்புகிறேன்’ என்றார்.