‘பொதுச்செயலாளரே, அ.தி.மு.க.வின் ஒரே அடையாளம்’ டெல்லி ஐகோர்ட்டில் டி.டி.வி.தினகரன் தரப்பினர் வாதம்
இரட்டை இலை சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி அணிக்கு தேர்தல் கமிஷன் வழங்கியதை எதிர்த்து டி.டி.வி.தினகரன் மற்றும் வி.கே.சசிகலா ஆகியோர் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் ஜி.எஸ்.சிஸ்தானி மற்றும் சங்கீதா டிங்கிரே அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது டி.டி.வி.தினகரன், வி.கே.சசிகலா சார்பில் வக்கீல் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர், ‘அ.தி.மு.க.வின் அடிப்படை விதிகளின் படி தலைமை பொறுப்பு பொதுச்செயலாளரிடம் உள்ளது. இந்த அடிப்படை விதியை மாற்ற முடியாது’ என்று கூறினார்.
அவர் மேலும் தனது வாதத்தில் குறிப்பிடுகையில், ‘கட்சியின் ஒரே அடையாளமாக இருப்பது பொதுச்செயலாளரும், அந்த பதவிக்கான தேர்தலுமே ஆகும். இவற்றை மாற்றி அமைத்திருப்பது கட்சி விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் என கருத முடியாது. மாறாக புதிய கட்சியாகவும் அதற்காக உருவாக்கப்பட்ட விதிகளாகவுமே கருத வேண்டும்’ என தெரிவித்தார்.
இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கு மீதான அடுத்தகட்ட விசாரணையை வருகிற 30–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர். இந்த வழக்கு விசாரணையை நேரில் காண்பதற்காக தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று ஐகோர்ட்டுக்கு வந்திருந்தார்.