Breaking News
சேலம், கோவை உள்பட நாடு முழுவதும் 129 மாவட்டங்களில், குழாய் மூலம் சமையல் கியாஸ் வினியோகம்: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

சேலம், கோவை உள்பட நாடு முழுவதும் 129 மாவட்டங்களில் குழாய் மூலம் சமையல் கியாஸ் வினியோகிக்கும் திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 3 ஆண்டுகளில் 400 மாவட்டங்கள் பயன்பெறும் என அவர் கூறினார்.
நாடு முழுவதும் வீடுகளுக்கு சமையல் கியாஸ்சை குழாய் மூலம் வினியோகிக்க வேண்டும் என்பது மத்திய அரசின் இலக்கு ஆகும்.

இந்த நிலையில், 9-வது சுற்று ஏலத்தின் கீழ், 18 மாநிலங்களில் 129 மாவட்டங்களில் உள்ள நகரங்களில் குழாய்கள் மூலம் வீட்டு சமையல் அறைகளுக்கே சமையல் கியாஸ் வினியோகம் செய்வதற்கான திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினால் தமிழ்நாட்டில் சேலம், கோவை நகரங்கள் பயன்பெறுகிறது.

இந்த திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா டெல்லியில் விஞ்ஞான பவனில் நேற்று நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி, காணொலி காட்சி வழியாக இந்த திட்டத்துக்கான அடிக்கல்லை நாட்டினார். 10-வது சுற்று ஏலத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

அப்போது பேசும்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசு கடந்த 4 ஆண்டு காலத்தில் நாடு முழுவதும் 12 கோடி சமையல் கியாஸ் இணைப்புகளை வழங்கி உள்ளது. இதில் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்கிற ஏழைப்பெண்கள் 6 கோடிப்பேருக்கு உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவசமாக இணைப்புகள் வழங்கியதும் அடங்கும். இதன்மூலம் நாட்டின் 90 சதவீத பகுதி, சமையல் கியாஸ் உபயோகத்தின் கீழ் வந்துள்ளது.

4 ஆண்டுகளுக்கு முன்பு இது 55 சதவீதமாக மட்டுமே இருந்தது.

அதாவது, 2014-ம் ஆண்டு வரை 60 ஆண்டு காலத்தில் 13 கோடி சமையல் கியாஸ் இணைப்புகளே வழங்கப்பட்டு இருந்தன.

2014-ம் ஆண்டு வரையில், 24 லட்சம் குழாய் வழி கியாஸ் வினியோக இணைப்புகள்தான் இருந்தன. தற்போது இது 32 லட்சமாக உள்ளது. இப்போது 10-வது சுற்று ஏல திட்டத்தின் முடிவில் இந்த எண்ணிக்கை, 2 கோடியை தாண்டி விடும்.

மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசின் ரெபார்ம், பெர்பார்ம், டிரான்ஸ்பார்ம் (சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம்) தத்துவத்துக்கு, எண்ணெய் துறையே உதாரணம்.

2014-ம் ஆண்டு வரை நகர கியாஸ் வினியோக திட்டத்தின்கீழ் 66 மாவட்டங்கள் பயன்பெற்று வந்தன. இன்னும் 174 மாவட்டங்களில் வேலைகள் நடந்து வருகின்றன. இதன் மூலம் இன்னும் 2 முதல் 3 ஆண்டுகளில், 400-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் இந்த நகர கியாஸ் வினியோக திட்டத்தின்கீழ் பயன்பெறும்.

தற்போது இயற்கை எரிவாயு விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை 1,470 ஆக உள்ளது. இந்த எண்ணிக்கை 2020-ம் ஆண்டு முடிவதற்குள் 10 ஆயிரம் என்ற அளவுக்கு உயரும்.

2014-ம் ஆண்டில் மக்கள் அரசை மட்டும் மாற்றவில்லை; வேலை செய்யும் பாணி, கலாசாரம், திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் வழிமுறை என எல்லாவற்றையும் மாற்றி இருக்கிறார்கள் என்று நான் சொன்னால், அது தவறு அல்ல.

இயற்கை எரிவாயு விற்பனை நிலையங்கள் (வாகன எரிபொருள் விற்பனை நிலையங்கள்) மூலமும், நகர கியாஸ் வினியோக திட்டத்தின் மூலமும் நாடு முழுவதும் மாசு குறையும். பாரீஸ் பருவ நிலை மாற்ற மாநாடு ஒப்பந்தத்தின் கீழ் நமது நிலையும் வலு அடையும்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.