தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டு வரக்கோரி வழக்கு – சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
மாநில சட்டசபை, நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க ஓட்டுச்சீட்டு முறைக்கு பதிலாக மின்னணு எந்திரத்தின் மூலம் ஓட்டுப் போடும் முறை கொண்டு வரப்பட்டது. இதனால் தேர்தல் முடிவுகள் விரைவாக வெளியாகின்றன. அரசுக்கு செலவும் குறைந்து உள்ளது.
ஆனால் மின்னணு எந்திரத்தில் மோசடி செய்ய முடியும் என்றும், இதனால் மீண்டும் வாக்குச்சீட்டு முறையையே கொண்டு வர வேண்டும் என்றும் சில கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன. இதை மறுத்துள்ள தேர்தல் கமிஷன், மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மிகவும் நம்பகமானது என்றும், அதில் எந்த மோசடியும் செய்ய முடியாது என்றும் பலமுறை விளக்கம் அளித்து உள்ளது. அதை நிரூபித்தும் காட்டி இருக்கிறது.
இந்த நிலையில், மீண்டும் வாக்குச் சீட்டு முறையையே கொண்டு வரவேண்டும் என்று கோரி ‘நியாய பூமி’ என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தவறாக பயன்படுத்த முடியும் என்றும், எனவே தேர்தல் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய அந்த எந்திரங்களை பயன்படுத்தக்கூடாது என்றும், இனிவரும் சட்டசபை, நாடாளுமன்ற தேர்தல்களில் மீண்டும் ஓட்டுச்சீட்டு முறையையே அமல்படுத்துமாறு உத்தரவிடவேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், எல்லா நடைமுறைகள் மற்றும் எந்திரங்களையுமே தவறாக பயன்படுத்த முடியும் என்றும், சந்தேகங்கள் எல்லா இடங்களிலும் உள்ளன என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.