இலங்கைக்கு எதிரான 3–வது டெஸ்ட்: வெற்றிப்பாதையில் இங்கிலாந்து
இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 336 ரன்களும், இலங்கை 240 ரன்களும் எடுத்தன. 96 ரன்கள் முன்னிலையுடன் 3–வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 2–வது இன்னிங்சில் 69.5 ஓவர்களில் 230 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 64 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 42 ரன்களும், பென் போக்ஸ் 36 ரன்களும் எடுத்தனர். இலங்கை தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் தில்ருவான் பெரேரா 5 விக்கெட்டுகளும், புஷ்பகுமாரா 3 விக்கெட்டுகளும், சன்டகன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
முன்னதாக பென் ஸ்டோக்ஸ் 22 மற்றும் 32 ரன்களில் கேட்ச் ஆன போது, இரண்டு முறையும் பவுலிங் செய்த சன்டகன் நோ–பாலாக வீசியது தெரியவந்ததால் எரிச்சலுக்குள்ளான இலங்கை பொறுப்பு கேப்டன் சுரங்கா லக்மல் கையில் இருந்த தண்ணீர் பாட்டிலை மைதானத்தில் வீசி ஏமாற்றத்தை வெளிப்படுத்தியது கவனிக்கத்தக்க அம்சமாகும.
பின்னர் 327 ரன்கள் இலக்கை நோக்கி 2–வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி ஆட்ட நேர முடிவில் 17 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை தாரைவார்த்து 53 ரன்களுடன் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இதில் மேத்யூஸ் (5 ரன்), கருணாரத்னே (23 ரன்) ஆகியோர் அவுட் ஆனதும் அடங்கும். 4–வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது. இலங்கை அணி வெற்றி பெற இன்னும் 274 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 6 விக்கெட் மட்டுமே உள்ளது. அதனால் இந்த டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெறவே பிரகாசமான வாய்ப்புள்ளது.