பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி 4–வது முறையாக ‘சாம்பியன்’ இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை பந்தாடியது
பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை பந்தாடி மகுடம் சூடியது.
பெண்கள் உலக கோப்பை
6–வது பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வந்தது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் முன்னாள் சாம்பியன்கள் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
இந்த நிலையில் இவ்விரு அணிகளில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் ஆன்டிகுவாவில் உள்ள சர்விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை அரங்கேறியது.
இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலிய பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது. மெதுவான தன்மை கொண்ட இந்த ஆடுகளத்தில் டேனியலி வியாட் (43 ரன்), கேப்டன் ஹீதர் நைட் (25 ரன்) தவிர மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. முடிவில் இங்கிலாந்து அணி 19.4 ஓவர்களில் 105 ரன்னில் சுருண்டது. பந்து வீச்சில் மிரட்டிய ஆஸ்திரேலியர்கள் பீல்டிங்கில் சோடை போனார்கள். பீல்டிங்கில் பல முறை பந்தை பிடிக்க தவறியதுடன், 5 கேட்ச் வாய்ப்புகளையும் வீணடித்தனர். இதில் கச்சிதமாக செயல்பட்டு இருந்தால் இங்கிலாந்து மூன்று இலக்க ஸ்கோரை தொட்டிருக்காது. ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்லே கார்ட்னெர் 3 விக்கெட்டுகளும், ஜார்ஜியா வார்ஹம், மேகன் ஸ்கட் தலா 2 விக்கெட்டும் சாய்த்தனர்.
ஆஸ்திரேலியா ‘சாம்பியன்’
அடுத்து எளிய இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணியில், தொடக்க வீராங்கனைகளான விக்கெட் கீப்பர் அலிசா ஹீலே 22 ரன்னிலும், பெத் மூனி 14 ரன்னிலும் வெளியேறினர். அப்போது அந்த அணி 2 விக்கெட்டுக்கு 44 ரன்கள் (7.1 ஓவர்) எடுத்திருந்தது.
இதன் பின்னர் ஆல்–ரவுண்டர் ஆஷ்லே கார்ட்னெரும் (33 ரன், ஒரு பவுண்டரி, 3 சிக்சர்) கேப்டன் மெக் லானிங்கும் (28 ரன், 3 பவுண்டரி) இணைந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். ஆஸ்திரேலிய அணி 15.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 106 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதோடு, கோப்பையையும் உச்சிமுகர்ந்தது. ஆஸ்திரேலிய அணி உலக கோப்பையை வெல்வது இது 4–வது முறையாகும். ஏற்கனவே 2010, 2012, 2014–ம் ஆண்டுகளிலும் வென்று இருந்தது.
ஆல்–ரவுண்டராக ஜொலித்த ஆஷ்லே கார்ட்னெர் ஆட்டநாயகி விருதையும், இந்த தொடரில் மொத்தம் 2 அரைசதங்கள் உள்பட 225 ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலிசா ஹீலே தொடர் நாயகி விருதையும் பெற்றனர்.
கேப்டன்கள் கருத்து
ஆஸ்திரேலிய கேப்டன் மெக் லானிங் கூறுகையில், ‘பீல்டிங்கில் இது சிறப்பான நாளாக அமையவில்லை. மற்றபடி இந்த வெற்றி மிகவும் உற்சாகம் அளிக்கிறது. வீராங்கனைகள் ஒருங்கிணைந்து அற்புதமாக செயல்பட்டனர். கடந்த இரண்டு உலக கோப்பை போட்டிகளில் (50 ஓவர் உலக கோப்பை போட்டியையும் சேர்த்து) ஏற்பட்ட தோல்வி அணியையும், வீராங்கனைகளையும் வேதனைக்குள்ளாக்கியது. எனவே இந்த உலக கோப்பை முடிவு எனக்கு மிகப்பெரிய திருப்தியும், மகிழ்ச்சியும் அளிக்கிறது. இந்த தருணத்திற்காக நீண்ட காலம் காத்திருந்தோம். இனி கொண்டாட்டம் தான்’ என்றார்.
இங்கிலாந்து கேப்டன் ஹீதர் நைட் கூறுகையில், ‘நல்ல தொடக்கம் கண்ட போதிலும் முக்கியமான கட்டத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் சவாலான ஸ்கோரை எட்ட முடியாமல் போய் விட்டது. இரவில் கொஞ்சம் பனிப்பொழிவு இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் எதிர்பார்த்ததை விட பனியின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. சூழ்நிலைக்கு தகுந்தபடி நாங்கள் விளையாடவில்லை. போதிய அனுபவம் இல்லாத அணியாகவே இங்கு வந்து, இறுதிப்போட்டி வரை முன்னேறியதை நினைத்து உண்மையிலேயே பெருமிதம் கொள்கிறேன்’ என்றார். அடுத்த பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை போட்டி 2020–ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கிறது.
ஐ.சி.சி. தரவரிசை
இந்த போட்டி முடிந்ததும் பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டது. இதில் உலக சாம்பியன் ஆஸ்திரேலியா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. 2–வது இடத்தில் இங்கிலாந்தும், 3–வது இடத்தில் நியூசிலாந்தும், 4–வது இடத்தில் வெஸ்ட் இண்டீசும் உள்ளன. இந்த உலக கோப்பையில் அரைஇறுதி வரை முன்னேறிய இந்திய அணி 5–வது இடம் வகிக்கிறது.
ஆச்சரியமான ஒற்றுமை
*பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி ஒரு போதும் இங்கிலாந்திடம் தோற்றதில்லை. இதற்கு முன்பு 2012, 2014–ம் ஆண்டுகளில் நடந்த இறுதி ஆட்டத்திலும் இங்கிலாந்தைத் தான் தோற்கடித்து இருந்தது.
*ஆச்சரியமான இன்னொரு விஷயம் என்னவென்றால் 2014–ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி இதே போன்று முதலில் பேட் செய்து 105 ரன்கள் எடுத்ததும், அந்த இலக்கை ஆஸ்திரேலியா 15.1 ஓவர்களில் எட்டியதும் குறிப்பிடத்தக்கது.
*ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் 28 வயதான எலிசி பெர்ரி இந்த ஆட்டத்தில் ஒரு விக்கெட் எடுத்தார். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அவர் இதுவரை 100 விக்கெட்டுகள் (102 ஆட்டம்) வீழ்த்தியிருக்கிறார். இந்த மைல்கல்லை எட்டிய முதல் ஆஸ்திரேலிய நாட்டவர் இவர் தான்.