‘கஜா’ புயல் சீரமைப்பு பணிகளுக்கு நிதி குவிகிறது ஒரே நாளில் ரூ.3.73 கோடி சேர்ந்தது
‘கஜா’ புயல் தாக்கியதில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கடலூர், திண்டுக்கல், சிவகங்கை, கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும், நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்குமாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 19-ந் தேதி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
அதன் அடிப்படையில், தொழிலதிபர்களும், பொதுமக்களும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடைகள் வழங்கி வருகின்றனர். ஆன்-லைன் மூலமாகவும் நிதி குவிந்து வருகிறது. கடந்த 24-ந் தேதி நிலவரப்படி, ரூ.13 கோடியே 32 லட்சத்து 67 ஆயிரத்து 288 அளவுக்கு நிதி வசூலாகியுள்ளது.
இந்த நிலையில், நேற்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சென்னை தலைமைச் செயலகத்தில் பலர் சந்தித்து புயல் நிவாரண நிதியை வழங்கினார்கள். ‘மாலை முரசு’ நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன் ரூ.25 லட்சத்திற்கான காசோலையை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினார்.
இதேபோல், கோவை லஷ்மி மெஷின் ஒர்க்ஸ் நிறுவன தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு ரூ.1 கோடிக்கான காசோலையையும், வி.ஜி.பி. குழுமத்தின் தலைவர் வி.ஜி.சந்தோசம் ரூ.10 லட்சத்திற்கான காசோலையையும், உதவும் கரங்கள் நிறுவனச் செயலாளர் வித்யாகர் ரூ.25 லட்சத்திற்கான காசோலையையும், ரெப்கோ வங்கி பணியாளர்கள் சார்பில் அதன் தலைவர் பி.செந்தில்குமார் ரூ.30 லட்சத்திற்கான காசோலையையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினார்கள்.
மேலும், சென்னை பெட்ரோலியம் கார்பரேஷன் நிறுவனம் மற்றும் பணியாளர்கள் சார்பில் அதன் நிர்வாக இயக்குனர் ரூ.50 லட்சத்திற்கான காசோலையையும், எவர்வின் கல்வி நிறுவனம் மற்றும் அறக்கட்டளை, மாணவர்கள் சார்பில் அதன் முதன்மை செயல் அலுவலர் மகேஸ்வரி ரூ.31 லட்சத்திற்கான காசோலையையும், சாய்ராம் கல்வி குழுமங்களின் சார்பில் அதன் தலைவர் சாய்பிரகாஷ் லியோ முத்து ரூ.25 லட்சத்திற்கான காசோலையையும், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் உறுப்பினர் சுதிர் லோதா ரூ.10 லட்சத்திற்கான காசோலையையும், திருவாரூர் ஸ்ரீ நாராயணி நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எஸ்.கார்த்திகேயன் ரூ.10 லட்சத்திற்கான காசோலையையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினார்கள்.
இதேபோல், சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.இளங்கோவன் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினார்.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர் சி.என். ராஜதுரை தனது மனைவியுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். ‘கிராப்ட் ஹெய்ன்ஸ் பிரைவேட் லிமிடெட்’ கிளை மேலாளர் சந்தோஷ்குமார் சிங் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினார். அப்போது டெல்லிக்கான தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் உடன் இருந்தார்.
இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி ரூ.7½ லட்சத்துக்கான காசோலையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினார்.
‘ரியல் எஸ்டேட் ஓனர்ஸ் அசோசியேஷன் ஆப் ஈரோடு’ சார்பில் அதன் தலைவர் வி.சதாசிவம் ரூ.20 லட்சத்துக்கான காசோலையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினார்.
நேற்று ஒரே நாளில் மட்டும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.3 கோடியே 73 லட்சம் கிடைத்துள்ளது.