திரிபுரா மாநிலத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத குக்கிராமம் நத்தையை சாப்பிடும் அவலம்
திரிபுரா மாநிலம் தலாய் மாவட்டத்தில் அம்பாசா பகுதியில் தனபான் ரியாங் என்ற குக்கிராமம் உள்ளது. இந்த கிராம மக்களுக்கு என குடிநீர், மின்சாரம், சாலை, ஆஸ்பத்திரி, பள்ளி என எந்த அடிப்படை வசதிகளையும் இதுவரை எந்த அரசும் ஏற்படுத்தி தரவில்லை.
சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் பக்மாரா என்ற இடத்தில் உள்ள மார்க்கெட்டுக்கு கிராம மக்கள் நடந்து சென்று கிடைக்கும் காய்கறிகளை வாங்கி வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு ரேஷன் கார்டுகளை மட்டும் அரசு வழங்கி இருக்கிறது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், சாலை வசதி இல்லாத ரேஷன் கடைக்கு வெகுதூரம் நடந்து சென்று கஷ்டப்பட்டு அரிசியை வாங்கி வருகிறோம். அங்கு 35 கிலோவுக்கு பதிலாக 15 கிலோ மட்டுமே அரிசி வழங்கப்படுகிறது. இதனால் உணவுக்கு எங்கள் பகுதியில் கிடைக்கும் நத்தை, காடுகளில் கிடைக்கும் இலை, பழங்களை உண்டு வருகிறோம். எங்கள் கஷ்டத்தை உணர்ந்து இனியாவது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேதனையுடன் தெரிவித்தனர்.