கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் மிகக் கடுமையானவை மத்திய குழு தலைவர் டேனியல் ரிச்சர்டு பேட்டி
கஜா புயல் பாதித்த பகுதிகளை கடந்த 3 நாட்களாக மத்திய குழுவினர் பார்வையிட்டனர். பின்னர் நேற்று பிற்பகல் 2.35 மணியளவில் சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, மத்திய குழுவினர் சந்தித்து பேசினர்.
அப்போது கஜா புயல் பாதிப்புகள் சம்பந்தமாக செய்யப்பட்ட ஆய்வுகள் பற்றி தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் பவர் பாயிண்ட் முறையில் விளக்கம் அளித்தார். இந்த சந்திப்பு பிற்பகல் 3.10 மணி வரை நீடித்தது.
பின்னர் அங்கிருந்த நிருபர்களுக்கு மத்திய குழுவின் தலைவர் டேனியல் ரிச்சர்டு (மத்திய உள்துறை இணைச்செயலாளர்) அளித்த பேட்டி வருமாறு:-
எங்கள் குழுவில் மத்திய அரசின் உள்துறை, நிதித்துறை, நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, எரிசக்தித்துறை, வேளாண்மைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளை சேர்ந்த அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த சனிக்கிழமையில் இருந்து தமிழகத்தில் கஜா புயல் கடுமையாக பாதித்த பகுதிகளை பார்வையிட்டோம். அந்த வகையில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு சென்றோம்.
அதுபோல திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த அறிக்கையையும் கவனத்தில் எடுத்துக்கொண்டோம். ஆனால் நேரமின்மையால் அங்கு எங்களால் செல்ல முடியவில்லை.
மிகக் கடுமையான பாதிப்புகள், சொத்து இழப்புகள், உயிரிழப்புகளை மிகவும் உணர்ந்தோம். இவற்றினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான வலியையும் எங்களால் உணர முடிந்தது. தென்னைகள், பலா மரங்கள், மா மரங்கள் உள்பட பல்வேறு மரங்கள் சாய்ந்துவிட்டன.
மீனவர்களின் படகுகள் சேதமடைந்துள்ளன. பல இடங்களில் கடல்நீர் ஊருக்குள் புகுந்துவிட்டது. இதனால் அங்கெல்லாம் சேறு உருவாகியுள்ளது. வீடுகள், குடிசைகளும் கஜா புயலுக்கு தப்பவில்லை. கான்கிரீட்டினால் கட்டப்பட்ட கிடங்குகள் போன்ற கட்டிடங்களையும் புயல் விட்டு வைக்கவில்லை.
புயலின் தீவிரம், வேகம், பலம், அதனால் ஏற்பட்ட கடுமையான பாதிப்புகள் ஆகியவற்றுக்கு இவைகளெல்லாம் சாட்சிகளாக அமைந்துள்ளன. தனக்கு குறுக்கே இருந்த எதையும் கஜா புயல் விட்டு வைக்காமல் துவம்சம் செய்துள்ளது.
தமிழக அரசு தனது பங்குக்கு, தீவிர தயார் நிலை நடவடிக்கைகளை மேற்கொண்டது. அந்த நடவடிக்கைகளால் பல உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளன என்பது பாராட்டுக்கு உரியது.
எப்படி என்றாலும், அந்த மாவட்டங்களின் உள்கட்டமைப்புகள் வெகுவாக பாதிப்படைந்துள்ளன. மின்சார கம்பங்கள், சாலைகள், பாலங்கள், வீடுகள் போன்றவை பலத்த சேதமடைந்துள்ளன. அவற்றை சீரமைக்கும் நோக்கத்தில் தமிழக அரசு பணியாற்றுகிறது.
பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரணம் பெற நல்ல ஆதரவை அரசு அளித்து வருகிறது. அதை நாங்கள் பார்த்திருக்கிறோம். மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளையும், நிவாரணங்களையும் செய்து கொடுக்க வேண்டும் என்பதில் அரசு முனைப்பு காட்டுகிறது.
எங்கள் அணியினர், மாநில அரசு அதிகாரிகள், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் அனைவரும் சேர்ந்து அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், இழப்புகளை கண்டுள்ளோம். நாங்கள் பார்த்து கணித்துள்ள சேத மதிப்பீட்டுடன் இங்கிருந்து திரும்பிச் செல்கிறோம்.
அதன் அடிப்படையில் எங்கள் குழுவின் அறிக்கை பின்னர் முடிவு செய்யப்படும். அதன் பிறகு மத்திய அரசின் சம்பந்தப்பட்ட குழுவின் பரிசீலனைக்காக அந்த அறிக்கை ஒப்படைக்கப்படும்.
திடீரென்று புயல் வீசி ஏற்படுத்திய இழப்புகளுக்கான நிவாரணங்களினால், இனிமேலும் தமிழக மக்கள் இதுபோன்ற வலிகளுடன் கஷ்டங்களை அனுபவிக்க தேவை இருக்காது என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களை ஆய்வு செய்ய வந்திருந்த மத்திய உள்துறை இணைச்செயலாளர் டேனியல் ரிச்சர்டு தலைமையிலான மத்திய நிதித்துறை ஆலோசகர் ஆர்.பி.கவுல், மின்துறை தலைமை பொறியாளர் வந்தனா சிங்கால், ஊரக வளர்ச்சி துறை அதிகாரி மாணிக் சந்தரா பண்டிட் உள்ளிட்ட குழுவினர் ஆய்வை முடித்துக்கொண்டு நேற்று மாலை 5 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் முலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.