மெஸ்சி, ரொனால்டோவின் ஆதிக்கத்துக்கு முடிவுகட்டி சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை பெற்றார், மோட்ரிச்
பிரான்ஸ் நாட்டின் கால்பந்து பத்திரிகை சார்பில் ஆண்டுதோறும் உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான பலோன் டி ஓர் விருது வழங்கப்படுகிறது. கால்பந்து உலகில் மிகவும் கவுரவமும், பெருமைக்கும் உரிய இந்த விருதை இந்த ஆண்டு குரோஷிய அணியின் கேப்டன் லூக்கா மோட்ரிச் தட்டிச்சென்றுள்ளார். 2008–ம் ஆண்டில் இருந்து இந்த விருதை அர்ஜென்டியாவின் லயோனல் மெஸ்சியும், போர்ச்சுகலின் கிறிஸ்டியானா ரொனால்டோவும் மாறி மாறி பெற்று தந்தனர். அவர்களின் ஆதிக்கத்திற்கு மோட்ரிச் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். விருது பட்டியலில் இருந்த ரொனால்டோ 2–வது இடத்தையும், பிரான்ஸ் வீரர் கிரீஸ்மான் 3–வது இடத்தையும் பெற்றனர்.
இந்த ஆண்டு நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் குரோஷிய அணியை முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேற வைத்து அசத்திய மோட்ரிச், ரியல் மாட்ரிட் கிளப்புக்காக தொடர்ந்து 3–வது முறையாக சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வெல்லவும் உதவிகரமாக இருந்தார்.
33 வயதான மோட்ரிச் கூறுகையில், ‘மகிழ்ச்சியை விவரிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை. இந்த ஆண்டு உண்மையிலேயே எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. கடந்த 10 ஆண்டுகளில் அனேகமாக தகுதி இருந்தும் பெற முடியாமல் போன வீரர்களுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்’ என்றார். மோட்ரிச் ஏற்கனவே சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் சிறந்த வீரர் விருதையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
சிறந்த வீராங்கனைக்கான பலோன் டி ஓர் விருதுக்கு நார்வே வீராங்கனை அடா ஹிஜெர்பர்க்கும், 21 வயதுக்குட்பட்டோருக்கான இந்த விருதை பிரான்ஸ் வீரர் கைலியன் பாப்பேவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.