Breaking News
வரலாறு படைக்குமா விராட் கோலி படை: இந்தியா–ஆஸ்திரேலியா முதலாவது டெஸ்ட் நாளை தொடக்கம்

இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் நாளை தொடங்குகிறது.

டெஸ்ட் கிரிக்கெட்
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் நடந்த 20 ஓவர் போட்டித் தொடர் 1–1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

அடுத்ததாக இந்தியா–ஆஸ்திரேலிய அணிகள் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகின்றன. ‘ஆலன்–பார்டர்’ கோப்பைக்கான இந்த தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரில் ஆடுவது ஒரு யுத்தம் போன்றே வர்ணிக்கப்படுவது உண்டு. அங்கு 1947–ம் ஆண்டில் இருந்து 11 முறை டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணி ஒரு முறை கூட தொடரை கைப்பற்றியதில்லை. தற்போது ஆஸ்திரேலிய அணியில் முன்னணி வீரர்கள் ஸ்டீவன் சுமித்தும், டேவிட் வார்னரும் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கி தடையை அனுபவித்து கொண்டிருக்கிறார்கள். இதனால் ஆஸ்திரேலிய அணி கொஞ்சம் பலவீனமடைந்துள்ளது. இதை சாதகமாக பயன்படுத்தி இந்திய அணி புதிய வரலாறு படைக்குமா? என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி நிற்கிறது.

விராட் கோலியை நம்பி…
இந்திய அணி கேப்டன் விராட் கோலியின் பேட்டிங்கை தான் மலை போல் நம்பி இருக்கிறது. 2014–15–ம் ஆண்டு அங்கு சென்ற போது 4 சதங்கள் உள்பட 692 ரன்கள் குவித்து புதிய உச்சத்தை தொட்டார். ‘ரன் குவிக்கும் எந்திரம்’ என்று அழைக்கப்படும் கோலி தான், ஆஸ்திரேலிய பவுலர்களின் பிரதான எதிரியாக இருக்கிறார். ‘இளம் புயல்’ பிரித்வி ஷா கணுக்கால் காயத்தால் அவதிப்படுவதால் முதலாவது டெஸ்டில் விளையாடமாட்டார்.

முரளிவிஜயும், லோகேஷ் ராகுலும் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைப்பார்கள். இவர்கள் ஆஸ்திரேலியாவின் ஆவேச தாக்குதலை முதல் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தாக்குப்பிடித்தாலே ஓரளவு நல்ல தொடக்கம் கிடைத்து விடும். புஜாரா, துணை கேப்டன் ரஹானே ஆகியோரும் பொறுப்புணர்வுடன் ஆட வேண்டியது அவசியமாகும்.

பொதுவாக ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு உகந்த வகையிலேயே இருக்கும். அடிலெய்டு ஆடுகளத்தில் கொஞ்சம் புற்கள் இருக்கும் என்று பிட்ச் பராமரிப்பாளர் ஹக் ஏற்கனவே கூறியுள்ளார். அதன்படி பார்த்தால், ஆடுகளத்தில் பந்து நன்கு ‘பவுன்ஸ்’ ஆகும். புவனேஷ்வர்குமார், பும்ரா, இஷாந்த் ‌ஷர்மா ஆகிய இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் எதிரணியை மிரட்டுவதற்கு வாய்ப்புள்ளது.

ஸ்டார்க்–ஹேசில்வுட் கூட்டணி
ஆஸ்திரேலிய அணி, இழந்த பெருமைகளை இந்த தொடரின் மூலம் மீட்டெடுக்கும் உத்வேகத்துடன் ஆயத்தமாகி வருகிறது. சொந்த மண்ணில் களம் காணுவது அவர்களுக்கு சாதகமான அம்சமாகும். பேட்டிங்கில் உஸ்மான் கவாஜா ஆணிவேராக விளங்குகிறார். ஆனால் அவரது சகோதரர் பயங்கரவாத வழக்கில் திடீரென கைது செய்யப்பட்டு இருப்பதால் கவாஜா மனரீதியாக தடுமாறக்கூடும்.

பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசில்வுட், பீட்டர் சிடில் உள்ளிட்டோர் சொந்த மண்ணில் அபாயகரமானவர்கள். விராட் கோலியை எப்படி வீழ்த்தலாம் என்று நாள்தோறும் திட்டங்களை வகுத்து வருகிறார்கள். அது மட்டுமின்றி முன்னாள் வீரர்கள் பலரும் நிறைய ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். ‘தொடக்கத்திலேயே எல்லைக்கோடு அருகே பீல்டர்களை நிறுத்தி பவுண்டரி செல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வெவ்வேறு இடங்களில் பீல்டர்களை நிறுத்தி நாம் ஏதோ செய்கிறோம் என்பதை அவருக்கு உணர்த்த வேண்டும். பவுலிங்கில் குடைச்சல் கொடுத்த பிறகு, கொஞ்சம் வார்த்தை போரிலும் ஈடுபட்டால் கோலியை காலி செய்து விடலாம்’ என்று முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். ‘சாதாரணமாக இல்லாமல் முதல் பந்தில் இருந்தே கோலிக்கு ஆக்ரோ‌ஷத்தை காட்ட வேண்டும். ஏனெனில் 20 பந்துக்கு மேல் நிலைத்து விட்டால் அதன் பிறகு அவர் கணிசமாக ரன்கள் குவித்து விடுவார். அதனால் பந்து வீச்சில் தொடக்கத்திலேயே தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்’ என்று முன்னாள் வீரர் கில்லெஸ்பி யோசனை தெரிவித்து இருக்கிறார். இதன் காரணமாக இந்த தொடர் கிரிக்கெட் அரங்கில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

முதலிடத்திற்கு ஆபத்து
ஐ.சி.சி. டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் இந்திய அணி 116 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ‘நம்பர் ஒன்’ இடத்தை தக்க வைப்பதற்கு குறைந்தது ஒரு டெஸ்டிலாவது இந்திய அணி ‘டிரா’ செய்ய வேண்டும்.

தரவரிசையில் 5–வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணி, 4 டெஸ்டுகளிலும் வெற்றி பெற்றால் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேற முடியும். அவ்வாறு நிகழ்ந்தால் இந்திய அணி 108 புள்ளிகளுடன் 3–வது இடத்துக்கு தள்ளப்படும். அதே சமயம் இந்திய அணி தொடரை முழுமையாக கைப்பற்றினால் அதன் புள்ளிகள் எண்ணிக்கை 120 ஆக உயரும்.

அதிகாலை 5.30 மணிக்கு…
முதலாவது டெஸ்ட் போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–

இந்தியா: முரளிவிஜய், லோகேஷ் ராகுல், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ரிஷாப் பான்ட், அஸ்வின், புவனேஷ்வர்குமார், பும்ரா, இஷாந்த் ‌ஷர்மா, முகமது ‌ஷமி அல்லது ரவீந்திர ஜடேஜா அல்லது ரோகித் சர்மா.

ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச், மார்கஸ் ஹாரிஸ், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், டிராவிஸ் ஹெட், டிம் பெய்ன் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், நாதன் லயன், மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் அல்லது பீட்டர் சிடில், ஜோஷ் ஹேசில்வுட்.

இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென்3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

டெஸ்ட் போட்டி அட்டவணை

தேதி போட்டி இடம் இந்திய நேரம்

டிச.6–10 முதலாவது டெஸ்ட் அடிலெய்டு அதிகாலை 5.30 மணி

டிச.14–18 2–வது டெஸ்ட் பெர்த் காலை 7.50 மணி

டிச.26–30 3–வது டெஸ்ட் மெல்போர்ன் அதிகாலை 5 மணி

டிச.3–7 4–வது டெஸ்ட் சிட்னி அதிகாலை 5.30 மணி

அடிலெய்டு மைதான கண்ணோட்டம்

முதலாவது டெஸ்ட் போட்டி நடக்கும் அடிலெய்டு, உலகத்தரம் வாய்ந்த மைதானங்களில் ஒன்றாகும். இங்கு 1884–ம் ஆண்டு முதல், டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதுவரை நடந்துள்ள 76 டெஸ்டுகளில் ஆஸ்திரேலியா 40–ல் வெற்றியும், 17–ல் தோல்வியும், 19–ல் டிராவும் கண்டுள்ளது. இந்திய அணி இங்கு 11 டெஸ்டுகளில் விளையாடி ஒன்றில் வெற்றியும், 7–ல் தோல்வியும், 3–ல் டிராவும் சந்தித்தள்ளது.

2003–ம் ஆண்டு ராகுல் டிராவிட்டின் இரட்டை சதத்தின் உதவியுடன் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது. இந்த நாள் வரைக்கும் இங்கு ஆசிய அணி ஒன்று பெற்ற ஒரே வெற்றி இது தான்.

இந்த மைதானத்தில் 20 இரட்டை சதங்கள் பதிவாகியுள்ளன. தனிநபர் அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் 299 ரன்கள் (தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக, 1932–ம் ஆண்டு) விளாசியுள்ளார். அதிக சதங்கள் அடித்தவராக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க் (7 சதம்) திகழ்கிறார். அதிக சதங்கள் அடித்த வெளிநாட்டவர் என்ற பெருமையை இந்தியாவின் விராட் கோலி (3 சதம்) பெறுகிறார். விக்கெட் வீழ்த்தியதில் ஆஸ்திரேலிய சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னே (13 டெஸ்டில் 56 விக்கெட்) முதலிடம் வகிக்கிறார்.

1948–ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி 674 ரன்கள் குவித்ததே, இந்த ஸ்டேடியத்தில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோராகும். 1951–ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி 82 ரன்னில் சுருண்டது குறைந்த ஸ்கோராகும்.

‘ஆஸ்திரேலிய அணிக்கே வெற்றி வாய்ப்பு’

‘எந்த ஒரு அணியும் உள்ளூரில் சிறப்பாக ஆட முடியும் என்ற மனநிலையிலேயே இருப்பார்கள். என்னை பொறுத்தவரை இந்த தொடரை வெல்வதற்கு இன்னும் ஆஸ்திரேலிய அணிக்கே வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன். ஸ்டீவன் சுமித், வார்னர் இல்லாதது ஆஸ்திரேலியாவுக்கு பின்னடைவு தான். அதனால் அந்த அணி பலவீனமாகி விட்டதாக நினைக்கவில்லை. எனவே அவர்களை எந்த வகையிலும் எளிதாக எடுத்துக் கொள்ளமாட்டோம். டெஸ்டில் வெற்றி பெறுவதற்கு பந்து வீச்சு தாக்குதல் வலுவாக இருக்க வேண்டியது அவசியம். அதுவும் அவர்களிடம் இருக்கிறது. பேட்டிங்கில் 4 அல்லது 5–வது வரிசையில் இறங்கும் போது கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்வது முக்கியமானது. நிலை நிறுத்திக்கொள்ள குறைந்தது 15–20 நிமிடங்கள் வேண்டும். ’.

– இந்திய துணை கேப்டன் ரஹானே.

‘பேட்டிங்கில் சாதிப்போம்’

‘‘விராட் கோலி சிறந்த வீரர் என்பதை அறிவோம். அவரை கட்டுப்படுத்த நாங்கள் நிறைய திட்டங்கள் வைத்துள்ளோம். அதை களத்தில் சரியாக செயல்படுத்த முடியும் என்று நம்புகிறோம். அவருக்கு மட்டுமல்ல, மற்ற இந்திய பேட்ஸ்மேன்களுக்கும் இதே போல் யுக்திகளை வகுத்துள்ளோம். பேட்டிங்கில் அனுபவமற்ற அணி என்று எங்களை பற்றி பேசுகிறார்கள். ஆனால் நாங்கள் உண்மைலேயே நல்ல நிலையில், நம்பிக்கையுடன் உள்ளோம். பேட்டிங்கில் ஒருங்கிணைந்து சாதிப்போம் என்று நம்புகிறேன்’’

– ஆஸ்திரேலிய துணை கேப்டன் மிட்செல் மார்ஷ்.

ஆஸ்திரேலிய அணியில் 6 வயது சிறுவன்

முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியையொட்டி ஆஸ்திரேலிய அணியினர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் இணைந்து ஆஸ்திரேலிய சீருடையுடன் 6 வயது சிறுவனும் துறுதுறுவென வலம் வருவதை பார்க்க முடிகிறது. யார் அந்த சிறுவன் என்று விசாரித்த போது, அந்த சிறுவனின் பெயர் ஆர்ச்சி ஷில்லர் என்பதும், இதய பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள அவனுக்கு இதுவரை 13 முறை ஆபரே‌ஷன் நடந்திருக்கும் அதிர்ச்சி தகவலும் தெரியவந்தது.

‘லெக்–ஸ்பின்னர்’ ஆக வேண்டும் என்பது அவனது விருப்பம். அவனது உடல்நிலையையும், கிரிக்கெட் ஆவலையும் தனியார் அமைப்பு மூலம் அறிந்து கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், அவனை தங்கள் அணி வீரர்களுடன் இணைந்து பயிற்சி செய்ய அனுமதித்துள்ளது. மெல்போர்னில் நடக்கும் 3–வது டெஸ்ட் போட்டி வரை அவன் ஆஸ்திரேலிய வீரர்களுடன் தங்கியிருந்து பயிற்சி உள்ளிட்ட வி‌ஷயங்களில் ஜாலியாக நேரத்தை செலவிடுவான். தனது சுழற்பந்து வீச்சால் விராட் கோலியை அவுட் ஆக்க வேண்டும் என்பதே இந்த சிறுவனின் மிகப்பெரிய ஆசையாகும்.

சாதனையை நோக்கி கோலி

‘இந்திய கேப்டன் விராட் கோலி சில சாதனைகளை நோக்கி பயணிக்கிறார். இன்னும் 8 ரன்கள் எடுக்கும் போது, ஆஸ்திரேலிய மண்ணில் ஆயிரம் ரன்களை கடந்த 4–வது இந்தியர் என்ற சிறப்பை பெறுவார். இந்த தொடரில் 2 சதங்கள் அடித்தால், ஆஸ்திரேலியாவில் அதிக சதங்கள் நொறுக்கிய இந்தியர் என்ற சாதனையை சச்சின் தெண்டுல்கரிடம் (6 சதம்) தட்டிப்பறிப்பார்’

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.