அடிலெய்டு டெஸ்ட்; உணவு இடைவேளையில் ஆஸ்திரேலியா 186/6 (83 ஓவர்கள்)
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டு நகரில் நடந்து வருகிறது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 250 ரன்களும், ஆஸ்திரேலிய அணி 235 ரன்களும் எடுத்துள்ளன.
இதையடுத்து, 15 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை ஆடிய இந்தியா 3வது நாள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்திருந்தது.
தொடர்ந்து நேற்று 4வது நாள் ஆட்டம் தொடங்கியது. இதில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 307 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் புஜாரா (71) மற்றும் ரஹானே (70) ரன்கள் எடுத்து அணிக்கு பலம் சேர்த்தனர். ரிஷப் பான்ட் (28) ரன்கள் எடுத்துள்ளார். மற்றவர்கள் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர். பம்ரா ஆட்டமிழக்கவில்லை.
ஆஸ்திரேலிய அணி சார்பில் லையன் 6 விக்கெட்டுகளும், ஏ. ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும், ஹேசில்வுட் 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதன்பின் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது. ஆட்ட நேர முடிவில் அந்த அணி 49 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், இன்று கடைசி நாள் ஆட்டத்தில் ஹெட் 14 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவருடன் விளையாடிய மார்ஷ் 66வது ஓவரில் பவுண்டரி அடித்து அரை சதம் கடந்து 60 ரன்களில் வெளியேறியுள்ளார். ஹேண்ட்ஸ்கோம்ப் (14), பெய்னி (41) ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அந்த அணி உணவு இடைவேளை வரை 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்துள்ளது.