‘சேவாக், சச்சினுடன் விளையாடமாட்டேன்’: தோனியின் மனநிலையை விளாசிய கம்பீர்
வீரேந்திர சேவாக், சச்சின், கம்பீர் ஆகிய 3 பேரும் ஒன்றாக விளையாட முடியாது, நானும் விளையாடமாட்டேன் என்று தோனி கூறியவுடன் எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது என்று கவுதம் கம்பீர் தோனியை விமர்சித்துள்ளார்.
இந்திய அணியின் சிறந்த தொடக்க ஆட்டக்காரராக இருந்த கவுதம் கம்பீர், கடந்த 4-ம் தேதி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தனது கடைசி ரஞ்சிக்கோப்பை போட்டியில் சதம் அடித்து அனைவரையும் வியக்க வைத்தார்.
சச்சின், டிராவிட், தோனி, சேவாக், லட்சுமண் என முன்னாள் வீரர்களுடன் விளையாடிய பெருமையும், அவர்களுக்கு இணையாகப் போட்டியில் சிறப்பான ஸ்கோர்களையும் அடித்தவர் கம்பீர். கடந்த 2013-ம் ஆண்டுக்குப் பின் அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்ட கம்பீர், அதன்பின் அணிக்குத் திரும்பவில்லை.
கம்பீரின் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்து வைத்ததிலும், குறிப்பாக இந்திய அணிக்குள் இடம் இல்லாமல் செய்தவகையிலும் தோனிக்கு குறிப்பிட்ட பங்கு உண்டு என்று ரசிகர்கள் தரப்பில் கூறப்படுவதுண்டு, சமூக வலைதளங்களிலும் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. இதை உண்மை என்ற ரீதியில் கவுதம் கம்பீர், ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு பகீர் பேட்டி அளித்துள்ளார்.
அதில் 2012-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த சிபி சிரீஸ் முத்தரப்பு ஒருநாள் தொடரின்போதே இந்திய அணியில் சச்சின், சேவாக் இருக்கக்கூடாது என்று தோனி முடிவு செய்துவிட்டார் என்று தெரிவித்துள்ள கம்பீர், தோனியின் கேப்டன்ஷிப்பையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக கம்பீர் கூறியதாவது:
”2012-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் சிபி சீரிஸ் முத்தரப்பு ஒருநாள் தொடர் நடந்தது. இலங்கை, இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சச்சின், சேவாக், தொடக்க ஆட்டக்காரர்களாகவும், நான் 3-வது வீரராகவும் களம் இறங்கினேன்.
சச்சின், சேவாக் போன்ற ஜாம்பவான்கள் ரன்கள் குறைவாக எடுக்கிறார்கள். அதனால், நல்லவிதமான ரிசல்ட் கிடைக்கவில்லை. இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க இயலவில்லை என்று கூறி அவர்களையும், என்னையும் ஓரம்கட்ட தோனி தீர்மானித்தார்.
அதனால், சேவாக்குடனும், சச்சினுடன் இனிமேல் கம்பீரை விளையாட அனுமதிக்க முடியாது. நானும் 3 பேருடன் விளையாட முடியாது என்று தோனி கூறியது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
2015-ம் ஆண்டு உலகக்கோப்பையை நோக்கி அணியை நகர்த்த வேண்டும் என்று தோனி தெரிவித்தார். ஆனால், இந்தப் போட்டித் தொடரிலேயே தோனி 2015-ம் ஆண்டு உலகக்கோப்பைக்கான அணியைத் தேர்வு செய்ய முடிவு செய்ததுதான் எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. எனக்கு மட்டுமல்ல எந்த கிரிக்கெட் வீரருக்கும் அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.
2015-ம் ஆண்டு உலகக்கோப்பையில் நீ விளையாடமாட்டாய் என்று 2012-ம் ஆண்டு ஒருவர் சொல்வதை இதற்கு முன் கேள்விப்படவே இல்லை. என்னைப் பொறுத்தவரை சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தால், நிச்சயம் அணியில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.
உங்களுக்கு ரன் குவிக்கும் திறமை இருந்து, களத்தில் திறமையில்லாவிட்டால், நீங்கள் விரும்பும்வரை விளையாடலாம். இதுதான் ஆஸ்திரேலியாவில் எங்களிடம் கூறப்பட்டது. நாங்கள் 3 பேரும் ஒன்றாக விளையாட முடியாது என்று தெரியவந்தது.
தொடரின் தொடக்கத்தில் நாங்கள் 3 பேரும் ஒன்றாக விளையாடவில்லை. எங்களில் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. ஆனால், சில தவிர்க்க முடியாத சூழலில் எங்கள் 3 பேருடன் தோனி விளையாட முன்வருவார்.
நான் கேட்கிறேன், நீங்கள் ஒரு முடிவு எடுத்துவிட்டால், அதில் தெளிவாக இருக்க வேண்டும். அதில் பின்வாங்கக்கூடாது. ஏற்கெனவே முடிவு செய்துவிட்ட ஒன்றில் இருந்து வாபஸ் பெறக்கூடாது.
எங்கள் 3 பேருடன் விளையாடமாட்டேன் என்று தோனி முடிவெடுத்தார். அதன்பின், எங்கள் 3 பேருடன் விளையாட முடிவு செய்தார். இதில் இருந்து தோனி முதலில் எடுத்த உண்மையான முடிவு தவறானதா அல்லது 2-வது எடுத்த முடிவு தவறானதா. கேப்டனாக தோனி முடிவெடுத்தார். ஆனால், அணியில் வீரர்களாக இருக்கும் எங்கள் 3 பேருக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது”.
இவ்வாறு கம்பீர் தெரிவித்தார்.
2012-ம் ஆண்டு சிபி சீரிஸ்முத்தரப்பு தொடரில் தோனி தலைமையிலான அணி தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலியாவும், இலங்கையும் இறுதிப்போட்டியில் மோதி, கோப்பையை ஆஸ்திரேலியா வென்றது. இந்தத்தொடரில் விராட் கோலி அதிகபட்சமாக 373 ரன்களைக் குவித்தார். கம்பீர் 308 ரன்கள் சேர்த்தார்.
இந்தத் தொடரில் 5 போட்டிகளில் விளையாடிய சேவாக் 65 ரன்களையும், சச்சின் 7 போட்டிகளில் விளையாடி 143 ரன்களும் சேர்த்தனர்.