Breaking News
பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய மந்திரியின் கன்னத்தில் அறைந்த வாலிபர் – மராட்டியத்தில் பரபரப்பு

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை மந்திரியாக இருப்பவர் ராம்தாஸ் அதவாலே. இந்திய குடியரசு கட்சி தலைவரான இவர் மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்துக்கு உட்பட்ட அம்பர்நாத் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.

அதில் இந்திய அரசியல் சாசனம் குறித்து உரையாற்றினார். பின்னர் மேடையில் இருந்து அவர் கீழே இறங்கிக்கொண்டு இருந்தார். அவருடன் பாதுகாவலர்களும் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது அவருக்கு மாலை அணிவிப்பது போல வாலிபர் ஒருவர் மந்திரியின் அருகே சென்றார். அங்கு சென்ற அவர் திடீரென மந்திரியின் கன்னத்தில் அறைந்தார். அத்துடன் நிறுத்தாமல் மந்திரியை மேலும் தாக்குவதற்கு முயன்றார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மந்திரியின் பாதுகாவலர்களும், இந்திய குடியரசு கட்சியினரும் உடனடியாக அந்த வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த தாக்குதலில் அவர் படுகாயமடைந்தார். எனவே அவரை மும்பையில் உள்ள மருத்துவமனையில் போலீசார் சேர்த்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் முதற்கட்ட விசாரணையில் அந்த வாலிபரின் பெயர் பிரவின் கோசாவி (வயது 30) என்பதும், இந்திய குடியரசு கட்சியின் முன்னாள் உறுப்பினர் எனவும் தெரியவந்தது.

இவர் குற்ற செயல்களில் ஈடுபட்டதால், கடந்த ஒரு ஆண்டுக்கு முன் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். இந்த ஆத்திரத்தில்தான் மந்திரியை அவர் அறைந்ததாக தெரிகிறது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையே மத்திய மந்திரி தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து அம்பர்நாத் நகர் முழுவதும் நேற்று முழு அடைப்பு போராட்டத்துக்கு இந்திய குடியரசு கட்சியினர் அழைப்பு விடுத்து இருந்தனர். இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

தன்மீது நடந்த தாக்குதல் தொடர்பாக மாநில அரசு மீது மந்திரி அதவாலே குற்றம் சாட்டியுள்ளார். தனக்கு போலீசார் தகுந்த பாதுகாப்பு அளிக்கவில்லை எனவும், தங்கள் வளர்ச்சியை பொறுக்காதவர்களே அந்த வாலிபரை தூண்டி விட்டு இருப்பதாகவும் கூறிய அவர், இது தொடர்பாக முதல்-மந்திரியை சந்தித்து பேச இருப்பதாகவும் தெரிவித்தார்.

மத்திய மந்திரி தாக்கப்பட்ட சம்பவம் மராட்டியத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.