முதல் முறையாக ரஷிய அதிபர் புதின் மகள் டி.வி.யில் தோன்றினார்
ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய எந்த தகவலும் வெளியுலகுக்கு கசிந்தது இல்லை. அவருக்கு 2 மகள்கள் இருப்பதாக மட்டும் தகவல்கள் வெளியானது உண்டு.
தனது மகள்கள் பற்றி எப்போதாவது புதின் பாசத்துடன் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசியது உண்டு. கடந்த ஆண்டு, “நான் தாத்தா ஆகி இருக்கிறேன்” என்று அவர் கூறினார். மற்றபடி அவர் குடும்பத்துடன் தோன்றுகிற படங்கள்கூட வெளிவந்தது இல்லை. விடுமுறையைக்கூட அவர் சைபீரியாவுக்கு சென்று மலை ஏறுதல், குதிரை சவாரி செல்லுதல் போன்றவற்றில்தான் கழிப்பது உண்டு.
இந்த நிலையில் ரஷிய அரசு டெலிவிஷனில் புதினின் இளைய மகள் என்று சொல்லப்படுகிற கேதரினா டிக்கோனோவாவின் பேட்டி முதன் முதலாக ஒளிபரப்பாகி உள்ளது. அதிலும்கூட அவர், அங்குள்ள மாஸ்கோ மாகாண பல்கலைக்கழக அறிவியல் இன்ஸ்டிடியூட் இயக்குனர் என்ற அளவில்தான் அறிமுகப்படுத்தப்பட்டு, கேள்விகள் எழுப்பப்பட்டு, பதில்கள் பெறப்பட்டுள்ளன. ஆனால், கேதரினா ரஷியா மற்றும் மேற்கத்திய ஊடகங்களால் புதினின் இளைய மகள் என்று கூறப்படுகிறவர் என்று ‘வீடோமோஸ்டி’ என்ற ரஷிய பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.
அவர் பொது வாழ்வுக்கு வரக்கூடும் எனவும் யூகங்கள் எழுந்துள்ளன. அதே நேரத்தில் ரஷிய அதிபரின் கிரெம்ளின் மாளிகை, கேதரினா பற்றிய தகவல்களை வெளியிட மறுத்து விட்டது.