ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் : இந்திய அணி முதலில் பந்து வீச்சு
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 2-வது டெஸ்ட் போட்டி உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் இன்று துவங்கியது. இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் இந்திய அணியை முதலில் பந்து வீச பணித்தார். இதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
ஏற்கனவே, முதல் போட்டியில் வெற்றி பெற்ற உத்வேகத்துடன் களம் இறங்கும் இந்திய அணி,அதே உத்வேகத்துடன் 2-வது டெஸ்டுக்கும் தயாராகியுள்ளது. இந்திய அணிக்கு திடீர் பின்னடைவாக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், பேட்ஸ்மேன் ரோகித் சர்மா ஆகியோர் இந்த டெஸ்டில் விளையாடவில்லை. அஸ்வின், வயிற்றின் அடிப்பகுதியில் வலியால் அவதிப்பட்டு வருகிறார்.
ரோகித் சர்மா முதலாவது டெஸ்டில் பீல்டிங் செய்த போது முதுகில் லேசான காயமடைந்தார். இருவரும் உடல்தகுதியை எட்டாததால் அவர்கள் விலக்கப்பட்டு இருப்பதாக அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஹனுமா விஹாரி இடம் பெறுவார். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானம் என்பதால், உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இரு அணிகளிலும் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம்
இந்தியா: லோகேஷ் ராகுல், முரளி விஜய், விராட் கோலி (கேப்டன்), புஜாரா, ரகானே, ஹனுமா விஹாரி, ரிஷப் பாண்ட், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகம்மது சமி, ஜஸ்பிரித் பும்ரா
ஆஸ்திரேலியா:- ஆரோன் பிஞ்ச், மார்கஸ் ஹரிஸ், உஸ்மான் காவ்ஜா, ஷான் மார்ஸ், பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப், டிராவிஸ் ஹெட், டிம் பெய்ன் (கேப்டன்) பட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஜோஸ் ஹேசல்வுட்