‘உயிரோட்டமான பெர்த் ஆடுகளத்தால் பரவசமடைகிறேன்’ – கோலி
2-வது டெஸ்ட் போட்டியையொட்டி இந்திய கேப்டன் விராட் கோலி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- பெர்த் போன்ற உயிரோட்டமான ஆடுகளங்களை பார்க்கும் போது பதற்றத்தை விட, பரவசமும், உற்சாகமும் தான் ஏற்படுகிறது. இப்போது எதிரணியை ஆல்-அவுட் செய்யக்கூடிய திறமையான வேகப்பந்து வீச்சாளர்கள் எங்களிடம் இருக்கிறார்கள். இதற்கு மேல், ஆடுகளத்தில் உள்ள புற்களை அகற்றமாட்டார்கள் என்று நம்புகிறேன். ஆடுகளத் தன்மை ஒரு அணியாக மகிழ்ச்சி அளிக்கிறது.
பேட்டிங்கை பொறுத்தமட்டில் இதை எங்களுக்குள் சவாலாக எடுத்துக் கொண்டு, நேர்மறை எண்ணத்துடன் ஆடுவோம். இதே போல் அடிலெய்டு போட்டியை போன்று இங்கும் எங்களது பந்து வீச்சாளர்கள் சாதிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அடிலெய்டை விட பெர்த் ஆடுகளம் பந்து வீச்சாளர்களுக்கு அதிகமாக ஒத்துழைக்கும் என்று கருதுகிறேன்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆண்டுகளாக விளையாடி வருகிறேன். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் எனது வாழ்க்கையில் ஜோகன்னஸ்பர்க் போன்ற ஆடுகளத்தை ஒரு போதும் பார்த்ததில்லை. பெர்த்தில் ஏற்கனவே 2012-ம் ஆண்டில் விளையாடி இருக்கிறேன். ஆனால் அது ஜோகன்னஸ்பர்க் அளவுக்கு நெருக்கமாக கூட இல்லை.
எங்களது பந்து வீச்சாளர்கள் உச்சக்கட்ட பார்மில் இருப்பது கேப்டனாக நான் செய்த அதிர்ஷ்டம். எதிரணி எப்படி, நாம் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி எல்லாம் நான் எதுவும் பவுலர்களுக்கு சொல்லிக்கொடுப்பதில்லை. அவர்களது போக்கிலேயே விட்டு விடுகிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் எதிரணியின் 20 விக்கெட்டுகளை கைப்பற்றாவிட்டால் வெற்றி பெற முடியாது. 600 அல்லது 700 ரன்கள் குவித்து விட்டு, 20 விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் போனால் அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை. 300 ரன்கள் மட்டும் எடுத்து, எதிரணியின் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றி கண்டால், ஒரு அணியாக அது தான் தேவையாகும். கடந்த மூன்று தொடர்களில் நமது பவுலர்கள் வியப்புக்குரிய வகையில் பந்து வீசி இருக்கிறார்கள். விக்கெட்டுகளை சாய்க்க வேண்டும், ரன்களை எளிதில் விட்டுக்கொடுக்கக்கூடாது என்ற வேட்கையுடன் உள்ளனர். ஒரு வெற்றியால் நாங்கள் திருப்தி அடைந்து விடமாட்டோம். தொடர்ந்து இதே போன்று விளையாடி தொடரை கைப்பற்றுவதே நோக்கம். சிறப்பாக பேட்டிங் செய்தால் நிச்சயம் நாங்கள் விரும்பிய முடிவு கிடைக்கும். இவ்வாறு கோலி கூறினார்.
கோலி மேலே குறிப்பிட்ட ஜோகன்னஸ்பர்க் டெஸ்ட் போட்டி கடந்த ஜனவரியில் நடந்தது. இதில் இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்தது. சகட்டுமேனிக்கு பந்து எகிறிப்பாய்ந்த இந்த ஆடுகளத்தில் 40 விக்கெட்டுகளும் வேகப்பந்து வீச்சில் தான் சரிந்தது. இன்றைய போட்டியில் இந்திய அணி பிரதான சுழற்பந்து வீச்சாளர் இன்றி 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கினால் இந்திய டெஸ்ட் வரலாற்றில் அது 3-வது நிகழ்வாக இருக்கும்.