ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை சூடுபிடித்தது: ஓ.பன்னீர்செல்வம் 20-ந் தேதி ஆஜராக ஆணையம் உத்தரவு
ஜெயலலிதா மரணம் குறித்து ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் உறவினர்கள், போயஸ் கார்டன் பணியாளர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள், எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் என இதுவரை 142 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தி உள்ளது. அவர்களின் வாக்குமூலத்தையும் ஆணையம் பதிவு செய்துள்ளது.
சசிகலா தனது தரப்பு வாக்குமூலத்தை வக்கீல் மூலம் தாக்கல் செய்துள்ளார். இதுவரை வாக்குமூலம் அளித்தவர்களிடம் சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை நடத்தி முடித்துள்ளார். தற்போது விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது.
இந்தநிலையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விசாரணைக்காக ஆஜராக ஆணையம் அவருக்கு சம்மன் அனுப்பி உள்ளது. வருகிற 20-ந் தேதி காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராகி ஜெயலலிதா மரணம் தொடர்பாக தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்கும்படி அந்த சம்மனில் கூறப்பட்டுள்ளது.
அதேபோல சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பொன்னையன் ஆகியோருக்கும் ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. அவர்கள் 18-ந் தேதி நேரில் ஆஜராக ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
சசிகலா தரப்பு வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன், துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, தங்கமணி, நிலோபர்கபில், முன்னாள் அமைச்சர் பொன்னையன் ஆகியோரிடம் ஆணையம் விசாரணை நடத்தும் என்றும், இல்லாதபட்சத்தில் இவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துவோம் என்றும் கூறியிருந்தார்.
அதன்படி தற்போது ஓ.பன்னீர்செல்வம், விஜயபாஸ்கர், பொன்னையன் ஆகியோருக்கு ஆணையம் சம்மன் அனுப்பி உள்ள நிலையில் மற்ற அமைச்சர்களுக்கும் அடுத்தடுத்து சம்மன் அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது.
இறுதியாக சசிகலா, அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர், துணைத்தலைவர், லண்டன் டாக்டர் ரிச்சர்டு பீலே ஆகியோரிடம் விசாரணை நடத்தவும் ஆணையம் முடிவு செய்துள்ளது.