புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடு லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை ரத்து ஐகோர்ட்டு உத்தரவு
தி.மு.க. ஆட்சியின்போது, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலக கட்டிடம் கட்டப்பட்டது.
இதன்பின்னர், அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், புதிய தலைமைச்செயலக கட்டிடம் கட்டியதில் பெரிய முறைகேடு நடந்துள்ளது என்று கூறி, இதுகுறித்து விசாரணை நடத்த ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.ரெகுபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து அப்போதைய முதல்-அமைச்சர் ஜெய லலிதா உத்தரவிட்டார்.
இதன்படி விசாரணை நடத்திய நீதிபதி ஆர்.ரெகுபதி, ஒரு கட்டத்தில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, தற்போதைய தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பினார்.
இதை எதிர்த்து 3 பேரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கடந்த 2015-ம் ஆண்டு நீதிபதி ஆர்.ரெகுபதி விசாரணை ஆணையத்தின் விசாரணைக்கும், சம்மனுக்கும் தடை விதித்து உத்தரவிட்டது.
இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை ஆணையம் அமைப்பதே கண்துடைப்பு நாடகம் என்று கருத்து தெரிவித்து, விசாரணையை தள்ளிவைத்தார். இதையடுத்து நீதிபதி ஆர்.ரெகுபதி தன் பதவியை ராஜினாமா செய்தார்.
இதன்பின்னர், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், ‘நீதிபதி ஆர்.ரெகுபதி ஆணையத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், இந்த விசாரணையில் இதுவரை சேகரித்த ஆதாரங்களை ஆய்வு செய்து, முறைகேடுக்கு முகாந்திரம் இருந்தால், அதுகுறித்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவிடலாம்’ என்றும் தீர்ப்பு அளித்தார்.
இதற்கிடையில், தி.மு.க. தலைவர் கருணாநிதி மரண மடைந்தார். அதேநேரம், ஐகோர்ட்டு உத்தரவின்படி, ‘நீதிபதி ரெகுபதி ஆணையம் சேகரித்த ஆவணங்களின் அடிப்படையில் மு.க.ஸ்டாலின் மற்றும் துரைமுருகனுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த தமிழக அரசு கடந்த செப்டம்பர் 24-ந்தேதி அரசாணை பிறப்பித்து உத்தரவிட்டது.
இந்த அரசாணையை ரத்துசெய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில், மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா விசாரித்தார். அப்போது தமிழக அரசு சார்பில் தமிழக தலைமை அரசு குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன், மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுப்படி, நீதிபதி ஆர்.ரெகுபதி ஆணையம் சமர்ப்பித்த ஆவணங்களை முழுமையாக பரிசீலிக்காமல், தமிழக அரசு நேரடியாகவே லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு அவசரகதியில் உத்தரவிட்டுள்ளது. இது சட்டவிரோதமானது என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
அதேபோல, அரசு தரப்பில் இதுதொடர்பான ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்பி வைக்கவும், அந்த ஆவணங்களில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்யலாம் என்றும் ஏற்கனவே நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார். அதன்படியே இதில் ரூ.629 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதால், இதை அப்படியே விட்டுவிட முடியாது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது என்று வாதிடப்பட்டது.
ஆனால் விசாரணை ஆணையம் என்பது உண்மையைக் கண்டறிந்து, அதன் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரை செய்யும் அமைப்பு அல்லது அறிவுறுத்தும் அமைப்பு ஆகும். இந்த விசாரணை ஆணையம் என்பது, நீதித்துறையின் ஒரு அங்கம் ஆகாது. விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகளை நிச்சயமாக நீதிமன்ற உத்தரவாக கருதமுடியாது.
நீதிபதி ஆர்.ரெகுபதி ஆணையம் தனது விசாரணை தொடர்பான எந்தவொரு அறிக்கையையும் அரசுக்கு தாக்கல் செய்யவில்லை. இந்த ஆணையத்தை நிறுத்தி வைக்க ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில் இதுவரை மேல்முறையீடும் செய்யவில்லை.
நீதிபதி ஆர்.ரெகுபதி தனது பதவியை ராஜினாமா செய்ததை, அரசும் மறுப்பு தெரிவிக்காமல் ஏற்றுள்ளது. இந்த சூழலில் நீதிபதி ஆர்.ரெகுபதி ஆணையம் சேகரித்த ஆவணங்களை மட்டுமே அடிப்படையாக வைத்து, அதுதொடர்பாக விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவிட முடியாது. எதற் காக இந்த விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டதோ, அந்த நோக்கமும் நிறைவேறவில்லை. எனவே, லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டு, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்கிறேன்.
இவ்வாறு நீதிபதி கூறி உள்ளார்.