தமிழக சட்டப்பேரவையில் துப்புரவுப் பணிக்காக விண்ணப்பித்த 4,600 பட்டதாரிகள், பொறியாளர்கள்
தமிழக சட்டப்பேரவையில் துப்புரவு மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கான வேலை குறித்து தலைமைச் செயலகம் அறிவித்திருந்தது. கூட்டிப் பெருக்கும் துப்புரவுப் பணியாளர்களுக்கு 10 காலியிடங்களும் சுகாதாரப் பணியாளர்களுக்கு 4 காலியிடங்களும் இருந்தன.
இந்நிலையில் செப்டம்பர் 26-ம் தேதி தலைமைச் செயலகம் காலியிடங்களுக்கான விண்ணப்பங்களை அளித்தது.
இதற்கு விண்ணப்பிப்பவர்களுக்கு கல்வித்தகுதி எதுவும் தேவை இல்லை. மாற்றுத் திறனாளிகளாக இல்லாமல் இருக்க வேண்டும். குறைந்தபட்ச வயது 18 முடிந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வேறுபடலாம்.
இந்நிலையில் வேலைவாய்ப்பு அலுவலகம் உள்ளிட்ட ஏராளமான இடங்களில் இருந்து இதற்கு விண்ணப்பங்கள் குவிந்தன.
இளங்கலை மற்றும் முதுகலை பொறியாளர்கள், எம்பிஏ பட்டதாரிகள், இளங்கலை, முதுகலை பட்டதாரிகள், டிப்ளமோ முடித்தவர்கள் காலியிடங்களுக்காக முண்டியடித்தனர். மொத்தத்தில் 4,607 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் இருந்து 677 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
மீதியுள்ளவர்களில் இருந்து பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர் என தலைமைச் செயலகம் அறிவித்துள்ளது.