வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் குல்தீப் யாதவ் எங்களது ‘நம்பர் ஒன்’ சுழற்பந்து வீச்சாளர் – இந்திய பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பேட்டி
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஏற்கனவே வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியதோடு, இன்னிங்சில் 5 விக்கெட்டும் (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக) வீழ்த்தியுள்ளார். அவர் தான் வெளிநாட்டு டெஸ்டுகளில் நமது முதன்மை சுழற்பந்து வீச்சாளர். ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் இறங்கும் சூழ்நிலை ஏற்பட்டால், அந்த இடத்திற்கு குல்தீப் யாதவைத்தான் தேர்வு செய்வோம்.
சிட்னியில் நடந்த டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவின் சுழலில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் திணறினர். அவர் பவுலிங் செய்த விதம் என்னை வெகுவாக கவர்ந்தது. இது மணிக்கட்டை அதிகமாக பயன்படுத்தி சுழற்பந்து வீசும் காலம்.
ஒவ்வொருவருக்கும் நேரம் என்பது (அஸ்வின் மோசமான உடல்தகுதியை குறிப்பிட்டு) உண்டு. இப்போதைக்கு அன்னிய நாட்டு டெஸ்ட் போட்டிகளுக்கு குலதீப் யாதவே எங்களது ‘நம்பர் ஒன்’ சுழற்பந்து வீச்சாளர் என்பதில் சந்தேகம் இல்லை. இவ்வாறு ரவிசாஸ்திரி கூறினார்.
ரவிசாஸ்திரியின் கூற்று மூலம் இனி வெளிநாட்டு டெஸ்டுகளில் குல்தீப் யாதவுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும் என்பது தெளிவாக தெரிகிறது. தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இந்தியாவில் நடக்கும் போட்டிகளில் தான் இருப்பார்கள் என்பதையும் அவர் சூசகமாக உணர்த்தியுள்ளார். அஸ்வின் அடிக்கடி காயமடைவதும், உடல்தகுதியை மேம்படுத்துவதில் சோடை போவதும் குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி ஏற்கனவே அதிருப்தி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.