அனைத்து நாடுகளை சேர்ந்தவர்களும் ‘சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அமெரிக்காவுக்கு வாருங்கள்’ டிரம்ப் அழைப்பு
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அகதிகள் மற்றும் சட்டவிரோத குடியேறிகள் விவகாரத்தில் கடுமையான போக்கை கையாண்டு வருகிறார். அத்துடன் பிற நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்க மக்களின் வேலைவாய்ப்பை தட்டிப்பறிப்பதாக அவர் எண்ணுகிறார்.
இதனால் வெளிநாட்டினர் அமெரிக்காவுக்கு வருவதற்கான நடைமுறைகளையும், அவர்கள் விசா பெறுவதற்கான நடைமுறைகளையும் அவர் கடுமையாக்கினார். குறிப்பாக இந்தியர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற ‘எச் 1 பி’ விசா வழங்கப்படுவதில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அவர் ஏற்படுத்தினார்.
அதேபோல் தென் அமெரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் நுழைவதை தடுக்க எல்லையில் பிரமாண்டமான சுவர் எழுப்பவதில் அவர் விடாப்பிடியாக உள்ளார்.
இதற்காக அவர் உள்நாட்டு நிதியில் சுமார் ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்க நாடாளுமன்றத்தை வலியுறுத்தியபோது, ஜனநாயக கட்சியினரிடம் எதிர்ப்பு கிளம்பியது.
இதனால் செலவின மாசோதவை நிறைவேற்றுவதில் சிக்கல் எழுந்து, முன் எப்போதும் இல்லாத வகையில் சுமார் 1 மாதம் பல்வேறு அரசுத்துறைகள் முடங்கின.
இந்த சர்ச்சையால் ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் நாடாளுமன்றத்தில் இரு சபைகளின் உறுப்பினர்கள் மத்தியில் ஜனாதிபதி உரை நிகழ்த்தும் நிகழ்ச்சி தள்ளிப்போனது.
இதற்கிடையில் நீண்ட இழுபறிக்கு பிறகு அரசுத்துறைகள் முடக்கம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அதனை தொடர்ந்து ஜனாதிபதி டிரம்ப் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இந்த உரையில் ஜனாதிபதி டிரம்ப், ‘‘அனைத்து நாட்டு மக்களும் அமெரிக்காவுக்கு வரவேண்டும். ஆனால் அவர்களின் வருகை சட்டப்பூர்வமானதாக இருக்க வேண்டும்’’ என வலியுறுத்தினார். இது குறித்து அவர் கூறியதாவது:–
அமெரிக்க மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பை பாதுகாக்க சிறப்பான குடியேற்ற நடைமுறையை உருவாக்க வேண்டியது நமது தார்மீக கடைமை.
அதே சமயம் நமது நாட்டின் சட்டத்திட்டங்களை மதித்து, விதிமுறைகளை பின்பற்றி வாழ்ந்து வரும் லட்சக்கணக்கான குடியேறிகளுக்கும் பயன்தரும் வகையில் குடியேற்ற நடைமுறை உருவாக்கப்பட வேண்டும்.
சட்டப்பூர்வமான குடியேறிகள் எண்ணற்ற வழிகளில் நமது நாட்டை வளமாக்குவதோடு, நமது சமூகத்தையும் வலுப்பெற செய்கிறார்கள். எனவே அனைத்து நாட்டு மக்களும் அமெரிக்காவுக்கு வரவேண்டும் என நான் விரும்புகிறேன். ஆனால் அவர்கள் சட்டப்பூர்வமான முறையில் வரவேண்டியது கட்டாயம்.
மெக்சிகோ எல்லை பிரச்சினைக்கு தீர்வுகாணும் விதமாக என்னுடைய நிர்வாகம் அறிவுப்பூர்வமான ஒரு தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளது.
மனிதாபிமான உதவிகள், குழந்தை மற்றும் போதைப்பொருள் கடத்தல்களை தடுப்பதற்கான வழிமுறைகள் போன்ற எண்ணற்ற நல்ல விஷயங்கள் அந்த தீர்மானத்தில் உள்ளன.
கடந்த காலத்தில், இந்த அரங்கத்தில் இருக்கும் (நாடாளுமன்றம்) பெரும்பாலான உறுப்பினர்கள் எல்லைச்சுவர் கட்ட ஆதரவாக ஓட்டு போட்டனர். ஆனாலும் எல்லைச்சுவர் கட்டப்படவில்லை. நான் நிச்சயமாக கட்டுவேன்.
இவ்வாறு டிரம்ப் கூறினார்.