வடகொரியா ஏவுகணைகளை விமான நிலையங்களில் பதுக்கி வைத்துள்ளது: ஐநா குழு குற்றச்சாட்டு
அணு ஆயுதங்களை தயாரித்து உலக நாடுகளை தொடர்ந்து மிரட்டி வந்த வடகொரியா, சமீபத்தில் அமெரிக்காவுடன் இணக்கமான உறவை காட்டியது. இதன் தொடர்ச்சியாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆகிய இருவரும் சிங்கப்பூரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சந்தித்து பேசினர். அப்போது வடகொரியா அணு ஆயுதமற்ற நாடாக மாறும் என கிம் ஜாங் அன் உறுதி அளித்தார்.
இந்த சந்திப்புக்கு பின்னர் இருநாட்டு உறவில் இணக்கமான சூழல் உருவானது. எனினும் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது மற்றும் வடகொரியா மீதான பொருளாதார தடைகளை நீக்குவது போன்ற விவகாரங்களில் இருநாடுகள் இடையே கருத்து வேறுபாடு நீடிக்கிறது.
இந்த நிலையில், அமெரிக்காவின் தாக்குதலில் இருந்து பாதுகாக்க, வட கொரியா தனது ஏவுகணைகளை விமான நிலையங்களில் பதுக்கி வைத்துள்ளதாக ஐ.நா. நிபுணர் குழு குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலிடம் அந்தக் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- “வட கொரியாவின் அணு ஆயுத ஏவுகணைத் திட்டத்தைத் தடுப்பதற்காக அந்த நாடு மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் உரிய பலனை அளிக்கவில்லை.
பொருளாதாரத் தடைகளை மீறி சட்டவிரோதமாக அந்த நாட்டுக்கு பெட்ரோலியப் பொருள்கள் அனுப்பப்படுகின்றன. அதேபோல், தடை செய்யப்பட்ட தனது நிலக்கரியையும் வட கொரியா பிற நாடுகளுக்கு விற்பனை செய்து வருகிறது. அந்த நாட்டின் அணு ஆயுத ஏவுகணைத் தயாரிப்புத் திட்டம் தங்கு தடையின்றி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏவுகணைகளை ரகசியமாகத் தயாரிக்கவும், சோதிக்கவும் விமான நிலையம் போன்ற பொது இடங்களை வட கொரியா பயன்படுத்துகிறது.ஏவுகணைத் தயாரிப்புத் திட்டத்தைக் குலைப்பதற்காக அமெரிக்கா தாக்குதல் நடத்துவதைத் தடுக்கும் வகையில், தனது ஏவுகணைகளை விமான நிலையங்களில் வட கொரியா பதுக்கி வைக்கிறது. சட்டவிரோதமாக எண்ணெய் இறக்குமதி செய்வதற்கும், நிலக்கரி ஏற்றுமதி செய்வதற்கும் கூட விமான நிலையங்கள் பயன்படுத்தப்படுகின்றன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட கொரியா தனது ஏவுகணைத் திட்டத்தைக் கைவிடவில்லை என்று அண்மையில் அமெரிக்க உளவுத் துறை கூறியிருந்த நிலையில், ஐ.நா. நிபுணர் குழுவும் அதே கருத்தைத் தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.