கால்டாக்ஸி ஓட்டுநர் ராஜேஷ் தற்கொலை விவகாரம்; தரக்குறைவாக பேசிய போலீஸார் அடையாளம் காணப்பட்டனர்: காவல் ஆணையரிடம் அறிக்கை தாக்கல்
ஓட்டுநர் ராஜேஷ் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அவரை தரக்குறைவாகப் பேசியபோலீஸார் யார் என்பது இணைஆணையர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்தவர் ராஜேஷ்(25). சென்னையில் தனியார்நிறுவனத்தில் கால்டாக்ஸி ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார்.
கடந்த 25-ம் தேதி மறைமலைநகர் – சிங்கப்பெருமாள்கோவில் இடையே தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்டார்.
போக்குவரத்து போலீஸார் தன்னை தரக்குறைவாக பேசியதால்தான் தற்கொலை செய்துகொள்கிறேன் என தனது செல்போனில் வீடியோவாக பதிவுசெய்திருந்தார் ராஜேஷ். அதைத்தொடர்ந்து ராஜேஷ் தற்கொலைக்குக் காரணமான போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிகால்டாக்ஸி ஓட்டுநர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், கால்டாக்ஸி ஓட்டுநர் ராஜேஷை தரக்குறைவாக பேசிய போலீஸார் யார் என்பது பற்றி விசாரணை நடத்தி அறிக்கைதாக்கல் செய்ய காவல் ஆணையர்ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து இணை ஆணையர் விஜயகுமாரி தலைமையிலான அதிகாரிகள் அண்ணா நகர் மற்றும் திருமங்கலம் போக்குவரத்து காவல் பிரிவில் பணியாற்றுவோர் உள்ளிட்ட 68 பேரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணை அறிக்கை, சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனிடம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ராஜேஷைதரக்குறைவாகப் பேசிய இருபோக்குவரத்து போலீஸார்அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜேஷ் கூறிய அனைத்தும் உண்மை என்றும், போக்குவரத்து போலீஸார் மீதே தவறுஇருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருபோலீஸார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுஅறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுப்பதுடன், வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாக காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இதுகுறித்து தாமாகமுன்வந்து வழக்கு பதிவு செய்துள்ள மாநில மனித உரிமைகள் ஆணையத்திடமும், இந்த அறிக்கை சமர்பிக்கப்படஉள்ளது.