Breaking News
துண்டு, துண்டாக வெட்டிக்கொல்லப்பட்ட துணை நடிகையின் தலை, உடலை தேடும் பணி தீவிரம் கைதான கணவர் சிறையில் அடைப்பு

சென்னையை அடுத்த பெருங்குடி பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் ஒரு பகுதியில் சென்னை மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. கடந்த 21-ந்தேதி கோடம்பாக்கம் பகுதியில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் லாரியில் கொண்டு வந்து இங்கு கொட்டப்பட்டது.

அப்போது குப்பையில் வெட்டப்பட்ட நிலையில் பெண்ணின் வலது கை மற்றும் 2 கால்கள் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், பெண்ணின் கை மற்றும் கால்களை கைப்பற்றி கொலை செய்யப்பட்ட அந்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்?, அவரது உடலின் பிற உறுப்புகள் எங்கே? என தனிப்படை அமைத்து பல்வேறு கோணங்களில் தீவிரமாக தேடி வந்தனர்.

போலீசாரின் பல்வேறுகட்ட விசாரணையில், 16 நாட்களுக்கு பிறகு கொலை செய்யப்பட்ட அந்த பெண், சினிமா துணை நடிகையான கன்னியாகுமரியை சேர்ந்த சந்தியா(வயது 37) என்பதும், அவரது கணவரான தூத்துக்குடி டூவிபுரத்தை சேர்ந்த சினிமா இயக்குனர் பாலகிருஷ்ணன்(51) என்பவர்தான் அவரை கொலை செய்து, உடலை துண்டு, துண்டாக வெட்டி, வீசியதும் தெரிந்தது.

சென்னை ஜாபர்கான்பேட்டை பாரிநகர் காந்தி தெருவில் உள்ள வீட்டில் இருந்த பாலகிருஷ்ணனிடம் போலீசார் விசாரித்தபோது, முதலில் தனக்கும், மனைவிக்கும் சம்பந்தம் இல்லை. விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளோம் என்றார்.

குப்பை மேட்டில் மீட்கப்பட்ட பெண்ணின் கையில் டிராகன் படம் பச்சை குத்தப்பட்டு இருந்தது. பாலகிருஷ்ணனிடம் இருந்து செல்போனை வாங்கி போலீசார் பார்த்தபோது, அதில் அவரது மனைவி சந்தியா கையில் டிராகன் உருவம் பச்சை குத்திய படம் இருந்தது. அதை வைத்து இறந்தவர் சந்தியாதான் என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து பாலகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.

கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து இருந்ததும், சந்தியா, சினிமாவில் நடிக்கும் ஆசையில் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து இரவு நேரங்களில் வெளியே சுற்றினார். அதை கண்டித்ததால் ஏற்பட்ட தகராறில் சுத்தியலால் தாக்கி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

கொலை செய்த பின்னர் சந்தியாவின் உடலை துண்டு துண்டாக வெட்டி, 4 பார்சல்களாக கட்டி வெவ்வேறு இடங்களில் வீசி உள்ளார். பெருங்குடி குப்பை கிடங்கில் கை, கால்கள் கண்டெடுக்கப்பட்டது. அது தவிர இடுப்பு முதல் தொடை வரையிலான பாகங்கள் அடங்கிய பார்சல் ஜாபர்கான்பேட்டை பாலத்தின் கீழே இருந்து போலீசார் மீட்டனர்.

மீதம் உள்ள தலை மற்றும் இடது கை, உடல் பாகங்கள் அடங்கிய 2 பார்சல்களை வெவ்வேறு குப்பை தொட்டிகளில் வீசி உள்ளார். ஆனால் இதுவரையிலும் தலை, கை மற்றும் உடல் பாகங்கள் கிடைக்கவில்லை. குப்பைகளோடு அவைகளும் பெருங்குடி குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது.

இதையடுத்து பெருங்குடி குப்பை கிடங்கில் தலை, இடது கை மற்றும் உடல் பாகங்கள் கிடக்கிறதா? என பள்ளிக்கரணை போலீசார், மாநகராட்சி ஊழியர்கள் உதவியுடன் 5 பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்தநிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இயக்குனர் பாலகிருஷ்ணன், நேற்று ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். மாஜிஸ்திரேட்டு ஸ்டெர்லி, பாலகிருஷ்ணனிடம் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- பெயர் என்ன?

பதில்:- பாலகிருஷ்ணன்

கேள்வி:- தந்தை பெயர்?

பதில்:- ராமசாமி

கேள்வி:- வயது?

பதில்:- 51

கேள்வி:-முகவரி?

பதில்: தூத்துக்குடி, டூவிபுரம்.

கேள்வி:- எந்த வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளர்கள் என்று தெரியுமா?

பதில்:-தெரியாது.

கேள்வி:- மனைவியை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி ஆதாரங்களை அழித்ததாக வழக்கு போடப்பட்டு உள்ளது?

பதில்:-நான் கொலை செய்யவில்லை. ஆத்திரத்தில் யதார்த்தமாக நடந்துவிட்டது.

கேள்வி:- போலீசார் அடித்தார்களா?

பதில்:- இல்லை.

கேள்வி:- நீங்கள் கைதான விவரம் உங்கள் குடும்பத்தாருக்கு தெரிவிக்கப்பட்டதா? யாருக்கு தெரிவித்தனர்?

பதில்:- தெரிவித்தனர். எனது சகோதரருக்கு தெரிவித்து உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் பாலகிருஷ்ணனை வருகிற 19-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

இதையடுத்து போலீசார், பாலகிருஷ்ணனை புழல் சிறைக்கு அழைத்து சென்றனர். அப்போது அங்கிருந்த நிருபர்களிடம் பாலகிருஷ்ணன், “என் மனைவியை நான் கொலை செய்யவில்லை” என்று கூறினார்.

பாலகிருஷ்ணனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர். இதற்காக மனு தாக்கல் செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

ஜாபர்கான்பேட்டை வீட்டில் பாலகிருஷ்ணனை போலீசார் கைது செய்தபோது, நான் துணிகளை கொண்டு வந்துவிடுகிறேன். எப்படியும் 3 மாதம் சிறையில் இருக்க வேண்டி வரும் என்று போலீசாரிடம் யதார்த்தமாக கூறியதை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதன்படியே அவர் துணிகளுடன் தயாராக வந்தார்.

மேலும் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்ட அவரை புகைப்பட கலைஞர்கள் புகைப்படம் எடுக்கவும், வீடியோ எடுக்கவும் முயன்றபோது, “என்னை ஏன் சுற்றி வருகிறீர்கள்?. ஏன் போட்டோ எடுக்குகிறீர்கள்?” என்று கேட்டார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.