ரஞ்சி கிரிக்கெட்: விதர்பா அணி மீண்டும் ‘சாம்பியன்’
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில், நடப்பு சாம்பியன் விதர்பா-சவுராஷ்டிரா அணிகள் இடையிலான இறுதிப்போட்டி நாக்பூரில் கடந்த 3-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே விதர்பா அணி 312 ரன்னும், சவுராஷ்டிரா அணி 307 ரன்னும் எடுத்தன.
5 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய விதர்பா அணி 200 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதையடுத்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய சவுராஷ்டிரா அணி 4-வது நாள் ஆட்டம் முடிவில் 28 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 58 ரன்கள் எடுத்து தள்ளாடியது. விஸ்வராஜ் ஜடேஜா 23 ரன்னுடனும், கம்லேஷ் மக்வானா 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. மேலும் 148 ரன்கள் சேர்த்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் விஸ்வராஜ் ஜடேஜா, கம்லேஷ் மக்வானா ஆகியோர் தொடர்ந்து ஆடினார்கள். சுழற்பந்து வீச்சை கணித்து ஆட முடியாமல் சவுராஷ்டிரா அணியினர் திணறினர். கம்லேஷ் மக்வானா 14 ரன்னில் ஆதித்யா சர்வாதே பந்து வீச்சில் போல்டு ஆனார்.
அடுத்து வந்த மங்கட் 2 ரன்னில் எல்.பி.டபிள்யூ. ஆனார். நிலைத்து நின்று ஆடிய விஸ்வராஜ் ஜடேஜா 137 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 52 ரன்கள் எடுத்த நிலையில் ஆதித்யா சர்வாதேவின் சுழலில் சிக்கினார். அடுத்து களம் கண்ட கேப்டன் ஜெய்தேவ் உனட்கட் 7 ரன்னிலும், தர்மேந்திரசிங் ஜடேஜா 17 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.
சவுராஷ்டிரா அணி 58.4 ஒவர்களில் 127 ரன்னில் சுருண்டது. இதனால் விதர்பா அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மகுடம் சூடியது. விதர்பா தரப்பில் ஆதித்யா சர்வாதே 6 விக்கெட்டும், அக்ஷய் வார்ஹரி 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். விதர்பா அணியின் இடக்கை சுழற்பந்து வீச்சாளரான ஆதித்யா சர்வாதே 2 இன்னிங்சிலும் சேர்த்து 11 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார். முதல் தர கிரிக்கெட்டில் ஆதித்யா சர்வாதே ஒரு போட்டியில் 10 விக்கெட்டுக்கு மேல் கைப்பற்றுவது இதுவே முதல்முறையாகும். சவுராஷ்டிரா அணி 3-வது முறையாக 2-வது இடம் பிடித்தது.
மராட்டிய மாநிலத்தை சேர்ந்த விதர்பா அணி தொடர்ந்து 2-வது முறையாக ரஞ்சி கோப்பையை சொந்தமாக்கியிருக்கிறது. இதன் மூலம் ரஞ்சி கோப்பையை தக்க வைத்து கொண்ட 6-வது அணி என்ற பெருமையை விதர்பா பெற்றது. ஏற்கனவே மும்பை, மராட்டியம், கர்நாடகா, ராஜஸ்தான், டெல்லி அணிகள் தொடர்ச்சியாக 2 முறை பட்டம் வென்றுள்ளன.
வெற்றிக்கு பிறகு விதர்பா அணியின் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் கருத்து தெரிவிக்கையில், ‘கடந்த ஆண்டு நாங்கள் ரஞ்சி கோப்பையை வென்ற போது குருட்டாம் போக்கில் வென்று விட்டதாக எல்லோரும் நினைத்தார்கள். எனவே எங்களுக்கு கோப்பையை தக்க வைக்க வேண்டும் என்ற நெருக்கடி இருந்தது. ஆனாலும் எங்களது கவனம் எல்லாம் சிறப்பாக செயல்படுவதில் தான் இருந்தது. புகழை பற்றி நாங்கள் ஒருபோதும் கவலைப்படவில்லை’ என்றார்.
ரஞ்சி கோப்பையை வெல்வது எளிதல்ல – விதர்பா கேப்டன் பைஸ் பாசல்
விதர்பா கேப்டன் பைஸ் பாசல் கூறுகையில், ‘ரஞ்சி கோப்பையை வெல்வது எளிதான காரியம் கிடையாது. மொத்தம் 11 ஆட்டங்களில் (லீக் உள்பட) விளையாடி இருக்கிறோம். இவற்றில் வெற்றி பெறுவது எல்லாம் ஏதோ அதிர்ஷ்டத்தில் நடந்து விடாது. கடந்த ஆண்டு நாங்கள் அதிர்ஷ்டத்தால் வென்றோம் என்று யாராவது நினைத்திருந்தால், நாங்கள் மீண்டும் எங்களது திறமையை நிரூபித்து காட்டியிருப்பதை பாருங்கள். முதல்தர போட்டியில் வெற்றி பெறுவதற்கு, மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியாக வேண்டும்’ என்றார்.