பிரதமர் மீது ராகுல் நேரடி குற்றச்சாட்டு – ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் நிராகரிப்பு
இந்தியாவின் விமானப்படைக்கு ரபேல் போர் விமானங் களை கொள்முதல் செய்வதற் கான பேரத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றச்சாட்டு சுமத்தி வருகிறார்.
குறிப்பாக, ரபேல் போர் விமான தயாரிப்பில், பிரான்ஸ் நிறுவனமான ‘டசால்ட்’ நிறுவனத்துடன் இணைந்து செயல்பட இந்தியாவின் அனில் அம்பானி நிறுவனத்தை பிரதமர் மோடி தேர்வு செய்து, அந்த நிறுவனத்துக்கு சாதகமாக நடந்துள்ளதாக ராகுல் காந்தி புகார் கூறுகிறார்.
இதை ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் மறுத்து வருகிறார்.
இந்தநிலையில் ரூ.59 ஆயிரம் கோடி மதிப்பிலான ரபேல் போர் விமான பேரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தபோது, அதற்கு இணையாக பிரதமர் அலுவலகம் ஒரு பேச்சு வார்த்தை நடத்தியதற்கு ராணுவ அமைச்சகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது என்று ஆங்கில நாளேடு ஒன்றில் நேற்று கட்டுரை வெளியாகி உள்ளது.
இதையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் அந்த நாளிதழில் வெளியான தகவல்களை மேற்கோள் காட்டி கூறியதாவது:-
இந்த நாட்டின் பாதுகாப்பு படைகளின் வீரர்கள் ஒவ்வொருவரிடமும் நான் பேச விரும்புகிறேன்.
ரபேல் போர் விமான பேரத்தில் பிரதமர் அலுவலகம் தனியாக நடத்திய பேச்சுவார்த்தை, ராணுவ அமைச்சகம் மற்றும் இந்திய பேச்சுவார்த்தை குழுவின் பேச்சுவார்த்தையை பலவீனப்படுத்தி உள்ளது என்பது தெள்ளத்தெளிவாகி உள்ளது. இந்திய பேச்சுவார்த்தை குழுவில் அங்கம் வகிக்காத பிரதமர் அலுவலக அதிகாரிகள் யாரும் பிரான்ஸ் அரசுடன் இணை பேச்சுவார்த்தை நடத்துவதை தவிர்க்க வேண்டும்.
ரபேல் விமான பேர விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் இணை பேச்சுவார்த்தை நடத்துகிறது என்று ராணுவ அமைச்சகமே கூறி விட்டது.
ரபேல் போர் விமானங்கள் தயாரிப்பில் இந்திய தரப்பில் கூட்டாளியாக இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு பதிலாக அனில் அம்பானியை தேர்வு செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடி என்னிடம் கூறினார் என்று பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே கூறியது சரியானது தான் என்பது ராணுவ அமைச்சகத்தின் குறிப்பில் இருந்து நிரூபணம் ஆகி உள்ளது.
இது ரபேல் போர் விமான பேரத்தில் பிரதமர் நரேந்திரமோடி குற்றவாளி என்பதை காட்டுகிறது. அனில் அம்பானி அவரது ஆள். அவருக்கு இந்திய விமானப்படையின் ரூ.30 ஆயிரம் கோடி கொடுக்கப்பட்டுள்ளது.
எங்களை பிரதமர் புறந்தள்ளிவிட்டார், அவர் நேரடி பேச்சுவார்த்தை நடத்துகிறார் என்று ராணுவ துறை செயலாளர் தெளிவாக கூறி இருக்கிறார். ரபேல் போர் விமான பேரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் அரசு பொய் சொல்லி இருக்கிறது. இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
மேலும், ரபேல் போர் விமான பேர விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற தனது கோரிக்கையை ராகுல் காந்தி மீண்டும் வலியுறுத்தினார்.
“நீங்கள் (மத்திய அரசு) என்ன விசாரணை நடத்த விரும்பினாலும் நடத்துங்கள். சட்டத்தை அமல்படுத்துங்கள். ராபர்ட் வதேரா, ப.சிதம்பரம் என யாருக்கு எதிராகவும் சட்டத்தை பயன்படுத்துங்கள். பிரச்சினை இல்லை. ஆனால், ரபேல் போர் விமான பேரம் தொடர்பாக விசாரணை நடத்தியே ஆக வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
ரபேல் போர் விமான பேர விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் நடத்திய பேச்சுவார்த்தைக்கு ராணுவ அமைச்சகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது என்று ஆங்கில நாளிதழில் வெளியான தகவல் நாடாளுமன்ற மக்களவையில் புயலை கிளப்பியது.
காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு ஆவேசமாக குரல் எழுப்பினர்.
அதைத் தொடர்ந்து பூஜ்ய நேரத்தின்போது ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் தானாக முன் வந்து ஒரு விளக்கம் அளித்தார். அவர் ஆங்கில நாளிதழில் கூறப்பட்ட தகவல்களை நிராகரித்தார்.
அப்போது அவர், “அவர்கள் செத்துப்போன குதிரையை சாட்டையால் அடித்து ஓட வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவ்வப்போது பிரதமர் அலுவலகம் நடத்திய விசாரணையை தலையீடு என்று கருத முடியாது” என குறிப்பிட்டார்.
மேலும், “பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் சுயநலசக்திகளின் கைகளில் சிக்கி எதிர்க்கட்சிகள் விளையாடிக்கொண்டிருக்கின்றன. அவர்கள் விமானப்படையின் நலனுக்காக உழைத்துக்கொண்டிருக்கவில்லை” என சாடினார்.
பிரதமர் அலுவலகம் நடத்திய பேச்சுவார்த்தைக்கு ராணுவ துறை செயலாளர் எதிர்ப்பு தெரிவித்தார் என்று வெளியான தகவல் பற்றி நிர்மலா சீதாராமன் குறிப்பிடுகையில், “எல்லாம் சரியாக நடந்து கொண்டிருக்கிறது, நீங்கள் அமைதியாக இருங்கள் என்று அந்த அதிகாரிக்கு அப்போதைய ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் பதில் அளித்துவிட்டார்” என்று குறிப்பிட்டார்.