மேற்கு வங்காள மண்ணை களங்கப்படுத்தி விட்டார், மம்தா: சாரதா நிதி நிறுவன ஊழல்வாதிகளை இந்த காவலாளி விடமாட்டான் – பிரதமர் மோடி உறுதி
மேற்கு வங்காள மாநிலம் ஜல்பைகுரி மாவட்டம் சூராபந்தரில் நேற்று பா.ஜனதா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அவர் பேசியதாவது:-
மேற்கு வங்காளத்தில் இடதுசாரிகளை வீழ்த்தி ஆட்சியை பிடித்தவர்கள், அதே வன்முறை கலாசாரத்தையே பின்பற்றுகிறார்கள். அவர்கள் மேற்கு வங்காள மண்ணை களங்கப்படுத்தி விட்டார்கள். அதனால் மக்கள் நிர்க்கதியாக விடப்பட்டுள்ளனர்.
லட்சக்கணக்கான ஏழைகளின் பணத்தை கொள்ளையடித்த மோசடியாளர்களை பாதுகாக்க ஒரு முதல்-மந்திரி தர்ணா போராட்டம் நடத்தியது, இதுவே முதல்முறை. ஆனால், இந்த காவலாளி (மோடி), சாரதா நிதி நிறுவன ஊழல்வாதிகளையோ, அவர்களை பாதுகாப்பவர்களையோ தப்ப விடமாட்டான். இவ்வாறு மோடி பேசினார்.
சூராபந்தரில், கொல்கத்தா ஐகோர்ட்டின் சர்க்யூட் கிளையை பிரதமர் மோடி திறந்துவைத்தார். அப்போது அவர் பேசுகையில், “வடக்கு வங்காள மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறி உள்ளது. அவர்கள் வழக்கு தொடர இனிமேல் 600 கி.மீ. பயணம் செய்து கொல்கத்தாவுக்கு செல்ல வேண்டியது இல்லை. 100 கி.மீ.க்குள் இங்கு வந்து விடலாம்” என்று கூறினார்.
சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் நேற்று நடந்த பா.ஜனதா பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்றார். அங்கு அவர் பேசியதாவது:-
விவசாய கடன் தள்ளுபடி செய்வதாக பொய் சொல்லி, சத்தீஷ்காரில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. ஆனால், கூட்டுறவு, கிராமப்புற வங்கிகளில் பெற்ற கடன்களை மட்டும் தள்ளுபடி செய்துள்ளனர்.
அப்படியானால், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி பெற தகுதி இல்லையா? இந்த விதிமுறைகளை ஏன் முன்பே சொல்லவில்லை? அடகுகடைக்காரர்களிடமும், உறவினர்களிடமும் பெற்ற கடன்களை யார் தள்ளுபடி செய்வது?
சத்தீஷ்கார் மாநில அரசு, சி.பி.ஐ.க்கு முட்டுக்கட்டை போட முடிவு செய்துள்ளது. தவறு செய்தவர்கள்தான் விசாரணையை கண்டு பயப்படுவார்கள். காரணமின்றி யாராவது விசாரணை நடத்துவார்களா?
இந்திரா காந்தி குடும்பத்தில் பெரும்பாலானோர், ஒன்று ஜாமீனில் இருக்கிறார்கள் அல்லது முன்ஜாமீன் பெற்றிருக்கிறார்கள். மெகா கலப்பட கூட்டணியிடம் மக்கள் உஷாராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.