உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் விஷ சாராய சாவு 70 ஆக உயர்வு
உத்தரபிரதேச மாநிலம் குஷிநகர், சகரன்பூர் மாவட்டங்களில் விற்கப்பட்ட விஷ சாராயத்தை வாங்கி குடித்த பலர் மயங்கி விழுந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சிகிச்சை பலனின்றி 35 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் சகரன்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மேலும் 11 பேர் இறந்தனர்.
இதேபோல் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டம் பல்லுபூர் கிராமத்தில் விஷ சாராயம் குடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. இதனால் 2 மாநிலங்களிலும் சேர்த்து விஷ சாராயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் நடந்த விஷ சாராய சாவு குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள அந்த மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதற்கிடையே விஷ சாராயத்தை கட்டுப்படுத்த தவறியதாக உத்தரபிரதேசத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் கலால் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.