ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி 2-வது வெற்றி
5-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.) தொடரில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 73-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-பெங்களூரு எப்.சி. அணிகள் மோதின. அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட நடப்பு சாம்பியனான சென்னை அணி தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தது. 32-வது நிமிடத்தில் சென்னை அணி முதல் கோல் போட்டது. அந்த அணியின் நட்சத்திர வீரர் ஜெஜெ லால்பெகுலா 4 பின்கள வீரர்களை போக்கு காட்டி இந்த கோலை அடித்தார்.
43-வது நிமிடத்தில் சென்னை அணி 2-வது கோலை அடித்து தனது முன்னிலையை அதிகரித்தது. சென்னை வீரர் ரெந்த்லே கோலை நோக்கி அடித்த பந்தை பெங்களூரு அணியின் பின்கள வீரர் தடுக்காமல் கோட்டை விட்டார். அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட கிரிகோரி நெல்சன் மின்னல் வேகத்தில் பந்தை அடித்து கோலாக்கினார். இதனால் முதல் பாதியில் சென்னை அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
பின் பாதியில் பதில் கோல் திருப்ப பெங்களூரு அணி ஆக்ரோஷமாக போராடியது. இதன் பலனாக 57-வது நிமிடத்தில் பெங்களூரு அணி பதில் கோல் திருப்பியது. சக வீரர் ஸிஸ்கோ ஹெர்னான்டஸ் கடத்தி கொடுத்த பந்தை சுனில் சேத்ரி கோலாக்கினார். அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில் சென்னை அணி 2-1 என்ற கோல் கணக்கில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள பெங்களூருவை சாய்த்தது.
15-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். 2 டிரா, 11 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் தொடருகிறது. இந்த சீசனில் உள்ளூரில் சென்னை அணிக்கு கிடைத்த முதல் வெற்றி இது தான். அத்துடன் முந்தைய லீக் ஆட்டத்தில் பெங்களூருவிடம் அதன் சொந்த மண்ணில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்தது. 15-வது ஆட்டத்தில் விளையாடிய பெங்களூரு அணி சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். 9 வெற்றி, 4 டிராவுடன் அந்த அணி முதலிடத்தில் நீடிக்கிறது.
இன்று இரவு 7.30 மணிக்கு புனேயில் நடைபெறும் 74-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.புனே சிட்டி-அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.