வர்மா படத்தில் இருந்து விலகிக் கொள்வது என்பது நான் மட்டுமே எடுத்த முடிவு – இயக்குநர் பாலா
தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தை ‘வர்மா’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்துள்ளனர். பாலா இயக்க விக்ரம் மகன் துருவ் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது.
பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தை கைவிடுவதாக படத் தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் அறிவித்துள்ளது.
இதுகுறித்து டுவிட்டரில் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இ4 என்டர்டெயின்மெண்ட் அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் வர்மா என்ற தலைப்பில் தயாரித்துள்ளது. தயாரிப்பு நிறுவனத்திடம் கொடுக்கப்பட்ட படத்தின் இறுதி வடிவம் எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை. படத்தின் உருவாக்கத்தில் பல்வேறு வேறுபாடுகள் இருப்பதால், படத்தை கைவிட முடிவு செய்துள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தரப்பட்ட தவறான தகவலால், இந்த விளக்கத்தை தரவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன் என இயக்குநர் பாலா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
படைப்பு சுதந்திரம் கருதி வர்மா படத்தில் இருந்து விலகிக் கொள்வது என்பது நான் மட்டுமே எடுத்த முடிவு. தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தரப்பட்ட தவறான தகவலால், இந்த விளக்கத்தை தர வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன்.துருவ் விக்ரமின் எதிர்காலம் கருதி இதுகுறித்து மேலும் பேச விரும்பவில்லை.
தயாரிப்பாளர் உடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தையும் வெளியிட்டு இயக்குநர் பாலா விளக்கம் அளித்துள்ளார்.