விக்ரம் மகன் நடிக்கும் ‘வர்மா’ பாலாவுக்கு பதில் கவுதம் மேனன் இயக்குவார்
தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர், விக்ரம். சராசரி கதாநாயகனாக இருந்த இவரை, ‘சேது’ என்ற படம் நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தியது. இந்த படத்தை பாலா இயக்கியிருந்தார். தொடர்ந்து பாலா இயக்கிய ‘பிதாமகன்’ படம், இவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வாங்கி கொடுத்தது.
அதனால் விக்ரம் தனது மகன் துருவ்வை பாலா டைரக்ஷனில், கதாநாயகனாக அறிமுகம் செய்ய விரும்பினார். அதற்கு டைரக்டர் பாலாவும் சம்மதித்தார். இதற்காக ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடிய ‘அர்ஜுன் ரெட்டி’ என்ற தெலுங்கு படத்தை தமிழில் தயாரிக்கும் உரிமையை வாங்கினார்கள். தமிழ் படத்துக்கு, ‘வர்மா’ என்று பெயர் சூட்டப்பட்டது.
இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. எடிட்டிங், டப்பிங், பின்னணி இசை சேர்ப்பு ஆகிய பணிகளும் நிறைவடைந்தன.
முதல் பிரதியை தயாரிப்பாளரும், படக்குழுவினரும் திரையிட்டு பார்த்தனர். திருப்தியாக இல்லை. அதனால், பாலா இயக்கிய ‘வர்மா’ படத்தை திரைக்கு கொண்டுவர தயாரிப்பாளரும், விக்ரமும் விரும்பவில்லை.
‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை வேறு ஒரு டைரக்டரை வைத்து மீண்டும் தயாரிப்பது என்ற முடிவுக்கு தயாரிப்பாளர் வந்தார். அதற்கு விக்ரமும் சம்மதித்தார். ‘வர்மா’ படத்தை மறுபடியும் புதிய கூட்டணியுடன் தயாரிக்க இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, அந்த படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் டைரக்டு செய்வார் என்று தெரிகிறது.
அதில் துருவ் கதாநாயகனாக நடிப்பார். மற்ற நடிகர்-நடிகைகள் மாற்றப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.