பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழகம் முழுவதும் 3,000 டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நிர்வாகம் முடிவு
பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழகம் முழுவதும் 3,000டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
இதற்காக, டாஸ்மாக் நிர்வாகம் ரூ.5 கோடி மதிப்பிலான டெண்டரை கோரியுள்ளது.
தமிழகத்தில் 5,000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு கடையிலும் தினமும் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சம் வரை விற்பனை நடைபெற்று வருகிறது. விற்பனையாகும் தொகை மறுநாள் வங்கியில் செலுத்தப்பட வேண்டும்.
விற்பனையாளர்கள் விற்பனைத் தொகையை வீடுகளுக்கு எடுத்துச் செல்லும்போது, அவர்களைத் தாக்கிவிட்டு பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வந்தன.
இதைத்தொடர்ந்து, விற்பனைத்தொகையை கடையில் வைத்துவிட்டுச் செல்லத் தொடங்கினர். ஆனால், கொள்ளையர்கள் நோட்டமிட்டு இரவு நேரங்களில் கடையின் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் செல்லும் சம்பவங்களும் தொடர்கின்றன.
இந்தச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களைப் பிடிப்பது போலீஸாருக்கு பெரிய சவாலாக உள்ளது. எனவே, பாதுகாப்புக்காக டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த டாஸ்மாக் நிர்வாகம் கடந்த ஆண்டு முடிவு செய்தது. ஆனால், இதற்கான பணிகள் தொடங்கப்படாமல் இருந்தன. இந்நிலையில், முதற்கட்டமாக, 3,000 டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம், மண்டல அலுவலகம் மற்றும் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் இருந்து நேரடியாகக் கண்காணிக்க மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.5 கோடி மதிப்பிலான டெண்டர் டாஸ்மாக் நிர்வாகத்தால் கோரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:பாதுகாப்பு நடவடிக்கைக்காக ஒரு கடைக்கு 2 கண்காணிப்பு கேமரா என 3,000 கடைகளுக்கு 6,000 கேமராக்களைப் பொருத்த முடிவு செய்துள்ளோம். 38 மாவட்டமேலாளர்கள் அலுவலகம், 5 மண்டல மேலாளர் அலுவலகம், டாஸ்மாக் தலைமை அலுவலகங்களிலும் கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்படும். கொள்ளைச் சம்பவங்கள் உட்பட ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால் பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் பயன்படுத்தப்படும். ஒப்பந்த புள்ளிகளைத் தாக்கல் செய்ய மார்ச் 12-ம் தேதி கடைசி நாளாகும் என்றார்.