ரபேல் விவகாரம் : சிஏஜி அறிக்கை இன்று தாக்கல்
சிஏஜி எனப்படும் மத்திய கணக்குத் தணிக்கைத்துறையின் ஆடிட்டர் குழு ரபேல் போர் விமானங்கள் வாங்க போடப்பட்ட ஒப்பந்தம் தொடர்பான தனது அறிக்கையை மத்திய அரசிடம் இன்று (பிப்.,11) தாக்கல் செய்ய உள்ளது.
ரூ.59,000 கோடி மதிப்புடைய ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. கூடுதல் விலைக்கு விமானங்கள் வாங்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டிய காங்கிரஸ், ரபேல் விமானத்தின் விலை உள்ளிட்ட விவரங்களை வெளிப்படையாக வெளியிட வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக சிஏஜி இன்று தாக்கல் செய்ய உள்ள அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இன்று சிஏஜி அறிக்கை தாக்கல் செய்ததும், அந்த அறிக்கை ஜனாதிபதிக்கும், நிதியமைச்சகத்திற்கும் பிரதி அனுப்பப்படும். தொடர்ந்து பார்லி.,யில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்படும் தேதி, நேரம் குறித்து மத்திய அரசு முடிவு செய்யும். பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட்ட பிறகு இந்த அறிக்கை பொது கணக்குக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும். தற்போது பொது கணக்கு குழுவின் தலைவராக காங்., தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளார்.