இன்னும் 15 நாட்களில் தேர்தல் தேதி : மம்தா
இன்னும் 15 நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசுக்கு எதிராக டில்லியில் இன்று எதிர்க்கட்சிகள் நடத்தும் தர்ணா போராட்டத்தில் கலந்து கொள்ள டில்லி புறப்படுவதற்கு முன் கோல்கட்டாவில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, மீண்டும் ஆட்சிக்கு வரபோவதில்லை என மோடிக்கு தெரியும். அவரது காலாவதி தேதி முடிந்து விட்டது. இன்னும் 15 நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும். புதிய அரசை காண விரும்புகிறோம். நாடு மாற்றத்தை விரும்புகிறது. ஒன்றுபட்ட இந்தியாவையே நாடு விரும்புகிறது. அதுவே ஜனநாயகத்தை தொடர செய்யும் என்றார்.
சமீபத்தில் கோல்கட்டாவில் மம்தா நடத்திய தர்ணா போராட்டத்தின் தூண்டுதலாலேயே இன்று டில்லியில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று கூடி தர்ணா போராட்டம் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் கோல்கட்டாவில் மம்தா நடத்திய பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் விலகி இருந்ததை போன்று, இந்த முறையும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோர் தர்ணாவில் பங்கேற்காமல் இருக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.