தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக செயல்படும் 3,326 டாஸ்மாக் பார்களை மூடுங்கள் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
கோவை மாவட்டத்தை சேர்ந்த விவசாயி பிரபாகரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
மனுவில், பிரபாகரன் கூறியிருப்பதாவது:-
எனக்கு குடிப்பழக்கம் இல்லை. நான் அதிகாரிகள் மற்றும் டாஸ்மாக் கடை வாடிக்கையாளர்கள் மூலம் பல தகவல்களை சேகரித்தேன். டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுவுக்கு முறையான ரசீது வழங்கப்படுவது இல்லை.
கோவை மாவட்டத்தில் பல டாஸ்மாக் பார்கள், சட்டவிரோதமாக செயல்படுகின்றன. இந்த நிலை தமிழகம் முழுவதும் நிலவுகிறது.
எந்த ஒரு உரிமமும் இல்லாமலும், கட்டணம் செலுத்தாமலும் பார்கள் செயல்படுவதால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. டாஸ்மாக் கடைகளிலும், பார்களிலும் விலைப்பட்டியல் வைக்கவில்லை. அதனால், மதுபாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.
மேலும், பார்களில் சுகாதாரமற்ற முறையில் தின்பண்டங்கள் விற்பனை செய்யப் படுவது குறித்து கோவை மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தேன். இதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள பார்களில், சோதனை செய்த உணவு தர கட்டுப்பாட்டு அதிகாரிகள், அங்கு தரமற்ற உணவுகள் விற்பனை செய்யப்படுவதாக அறிக்கை தாக்கல் செய்தனர்.
இந்த பார்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டருக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. மேலும் சில டாஸ்மாக் கடைகளில் கலப்பட மதுக்களும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே, இதுபோன்ற செயல்களினால் அரசுக்கு ஏற்படும் இழப்பை தடுக்கவேண்டும்.
அதனால், டாஸ்மாக் மதுபான கடைகளில், மோசடிகளை தடுக்கும் மற்றும் கண்டறியும் சட்ட விதிகளை அமலுக்கு கொண்டுவந்து, மதுபாட்டில்கள் மற்றும் தின்பண்ட விற்பனைக்கு ரசீது வழங்க வேண்டும் என்றும், பார்களில் தரமான உணவு தின்பண்டங்கள் விற்பனை செய்யவும், அதிக விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதை தடுக்கவும் நான் கொடுத்த கோரிக்கை மனுவை பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
இந்த வழக்கிற்கு தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரை 3,326 சட்டவிரோத பார்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதாவது, மூத்த மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள் நடத்திய சோதனையில் 2,505 பார்களும், தலைமை அலுவலக அதிரடிப்படையினர் நடத்திய சோதனையில் 20 பார்களும், துணை கலெக்டர் மற்றும் அதிரடிப்படையினர் நடத்திய சோதனையில் 801 பார்களும் சட்ட விரோதமாக செயல்பட்டது கண்டறியப்பட்டு, போலீசார் மூலம் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரியவருகிறது.
எனவே, தமிழக உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை செயலாளர், அனைத்து மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட டாஸ்மாக் மேலாளர்கள் ஆகியோர் மூலம் தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக, அனுமதியின்றி செயல்படும் பார்களை உடனடியாக இழுத்து மூட நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அதன்பின்னர், அதுகுறித்த அறிக்கையை வருகிற 20-ந் தேதி ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.