பிரதமர், முதல்-அமைச்சர் கலந்துகொள்ளும் அரசு நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் பாடவேண்டிய கட்டாயம் இல்லைஐகோர்ட்டு கருத்து
சென்னை ஐகோர்ட்டில், பெண் சமூக ஆர்வலர் வேம்பு என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-
மத்திய, மாநில அரசு விழாக்களில் தேசிய கீதம் பாடவேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த மாதம் 2-ந் தேதி மதுரையில் நடந்த எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் தேசிய கீதம் பாடவில்லை.
இதுகுறித்து பிரதமரோ, முதல்-அமைச்சரோ வருத்தம் தெரிவிக்கவில்லை. அதேநேரம் தேசிய கீதம் பாடாததற்காக தண்டனை வழங்கும் விதிகள் எதுவும் இல்லை.
எனவே, தண்டனை வழங்கும் விதிகளை உருவாக்க தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும். இதுகுறித்து நான் அனுப்பிய புகாரையும், தேசிய கீதத்தை அவமதித்ததாக தமிழக தலைமை செயலாளருக்கு எதிராக நான் அனுப்பிய புகாரையும் பரிசீலிக்கவும், மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடவேண்டும். இவ்வாறு அவர் கூறி இருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அதற்கு நீதிபதிகள், ‘தேசிய கீத விதிகளின்படி, பிரதமர், முதல்-அமைச்சர் கலந்துகொள்ளும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதம் பாடவேண்டும் என்பது கட்டாயம் இல்லை’ என்று கருத்து தெரிவித்தனர். பின்னர், இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர்.