“சாதி மற்றும் மதம் அற்றவர்” சான்றிதழ் பெற்ற சிநேகா – கமல்ஹாசன் வாழ்த்து
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சீனிவாசன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் சிநேகா. வழக்கறிஞரான இவர் இளம் வயதிலேயே சாதி மற்றும் மத நம்பிக்கை இல்லாதவர் ஆவார். பார்த்திப ராஜா என்பவரை சமய சடங்குகள் இல்லாமல், வாழ்க்கை இணை ஏற்பு நிகழ்வில் திருமணம் முடித்தார். இத்தம்பதியருக்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில், சாதி மற்றும் மதம் அற்றவர் என்ற பெயரில் சான்றிதழ் வழங்க வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். நீண்ட இழுபறிக்கு பிறகு சிநேகாவுக்கு, “சாதி மற்றும் மதம் அற்றவர்” என சான்றிதழ் வழங்கப்பட்டது.
குழந்தைகளிடம் சாதி, மத பற்றுகளை ஒழித்து, சமூக விடுதலையை அவர்களது மனதில் பதிய வைக்க வேண்டும் என வழக்கறிஞர் சிநேகா கேட்டுக் கொண்டுள்ளார். சாதி, மதம் இல்லாத சந்ததிகள் உருவாக வேண்டும் என அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சமூக வலைதளங்களில் சிநேகாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. “சாதி மற்றும் மதம் அற்றவர்” என்ற சான்றிதழை, தமிழகத்தில் முதன்முறையாக வழக்கறிஞர் சிநேகா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.