அருண் ஜெட்லி இன்று மீண்டும் பொறுப்பேற்கிறார்?
மத்திய நிதியமைச்சராக அருண் ஜெட்லி இன்று (பிப்.,15) மீண்டும் பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அருண் ஜெட்லி, சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தார். இதனால் அவர் வகித்து வந்த நிதியமைச்சர் பொறுப்பு, பியூஷ் கோயலிடம் ஒப்படைக்கப்பட்டது. அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் ஜெட்லி உடல்நிலை தேறி வருவதாகவும், விரைவில் நாடு திரும்புவார் என்றும் கூறப்பட்டது. பிப்.,1 ம் தேதியன்று மத்திய பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்வார் என முன்பு கூறப்பட்டது. ஆனால் பிப்., 1 அன்று ஜெட்லி நாடு திரும்பாததால், இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் பியூஷ் கோயலே தாக்கல் செய்தார்.
இந்நிலையில் சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பும் அருண் ஜெட்லி, இன்று மீண்டும் மத்திய நிதியமைச்சர் பொறுப்பை ஏற்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக இன்று நடக்கும் பாதுகாப்பு குறித்த மத்திய அமைச்சரவை கூட்டத்திலும் அவர் பங்கேற்பார் என கூறப்படுகிறது.