உயர் அதிகாரிகளின் அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி., எஸ்.முருகன் மீது பெண் போலீஸ் சூப்பிரண்டு ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினார். இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையில் விசாகா கமிட்டியை தமிழக டி.ஜி.பி. அமைத்து உத்தரவிட்டார்.
இந்த விசாகா கமிட்டி, ஐ.ஜி. மீதான புகார் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு பரிந்துரைத்தது. இதை எதிர்த்து ஐ.ஜி. முருகன், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதேபோல, புகார் கொடுத்த பெண் அதிகாரியும் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி.யை முக்கியத்துவம் இல்லாத வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்யவேண்டும். விசாகா கமிட்டியில், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்களை உறுப்பினராக சேர்க்கவேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்குகளை எல்லாம் விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் நேற்று தீர்ப்பு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
அடுத்தவர்களுக்கு ‘டன்’ கணக்கில் உபதேசம் செய்வதைவிட, அந்த உபதேசத்தில் சிறிது அளவாவது நாம் பின்பற்ற வேண்டும் என்று மகாத்மா காந்தி கூறியுள்ளார். அதனால், இந்த தீர்ப்பை பிறப்பிப்பதற்கு முன்பாக, என்னுடைய சேம்பருக்கு (அலுவலக அறைக்கு) உள்ளே 2 வாரத்துக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்தும்படி ஐகோர்ட்டு நிர்வாக பதிவாளருக்கு உத்தரவிடுகிறேன்.
குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கைது செய்வதற்கு வசதியாக வியாபாரிகள், அடுக்குமாடி குடியிருப்பவர்கள் என்று அனைவரையும் தங்களது கடை, வீடுகளுக்கு முன்பு கண்காணிப்பு கேமராவை பொருத்தும்படி டி.ஜி.பி., மாநகர போலீஸ் கமிஷனர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் வற்புறுத்தி வருகின்றனர்.
குற்றச் செயல்களை தடுக்கவும், குற்றவாளிகளை அடையாளம் காணவும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும்படி பொதுமக்களுக்கு போலீஸ் அதிகாரிகள் உபதேசம் செய்யும் அதேநேரம், காவல் துறைக்குள் இருக்கும் குற்றவாளிகளையும், கருப்பு ஆடுகளையும் என்ன செய்வது?
எனவே, அனைத்து துறைகளின் உயர் அதிகாரிகளின் அலுவலக அறைகளுக்கு உள்ளேயும், வெளியேயும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். இதன்மூலம் போலீஸ் துறை மட்டுமல்லாமல், அனைத்து அரசு துறைகளில் உள்ள பாலியல் குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளிகள், கருப்பு ஆடுகளை எளிதில் கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.
இந்த வழக்கில் பெண் போலீஸ் சூப்பிரண்டு பாலியல் புகார் செய்துள்ளார். அதாவது, 2018-ம் ஆண்டு ஆகஸ்டு 1-ந் தேதி மதியம் ஐ.ஜி., தன் அறைக்கு கூப்பிட்டதாகவும், உள்ளே சென்றதும் தன்னை கட்டி அணைத்ததாகவும், அவரிடம் இருந்து கஷ்டப்பட்டு தப்பி வெளியில் வந்ததாக ஒரு பெண் அதிகாரியே கூறியுள்ளதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளமுடியாது. இதை தீவிர குற்றச்சாட்டாக இந்த ஐகோர்ட்டு கருதுகிறது.
எனவே, இந்த குற்றச்சாட்டு குறித்து தீவிரமாக விசாரித்து, அதில் உண்மை இருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆனால், துரதிருஷ்டவசமாக இந்த புகார் மீது கடந்த 6 மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதேபோல, கொடுக்கப்பட்டுள்ள புகார்களை படித்து பார்க்கும்போது, மானபங்கம் செய்ய முயற்சி நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. எனவே, அதுகுறித்து கிரிமினல் வழக்குப்பதிவு செய்யவேண்டும்.
புகார்தாரர் ஐ.பி.எஸ். பெண் அதிகாரி என்பதைவிட, அவர் இந்த தேசத்தின் ஒரு குடிமகள். எனவே, அரசியலமைப்புச் சட்டத்தின்படி, அவர் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் கிரிமினல் வழக்குப்பதிவு செய்யவேண்டும். எனவே, ஐ.ஜி.க்கு எதிராக கொடுக்கப்பட்டு புகார் மீது வழக்குப்பதிவு செய்ததில் எந்த சட்டவிரோதமும் இல்லை என்று முடிவு செய்கிறேன்.
அதனால், பணி செய்யும் இடத்தில் பெண்களுக்கு எதிராக பாலியல் கொடுமைகளை தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாகா கமிட்டி விசாரணை என்பது தனி, பெண்ணை மானபங்கம் செய்ய முயற்சி குற்றம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் பதிவு செய்துள்ள குற்ற வழக்கு விசாரணை என்பது தனி. இதுபோல, இருவிதமான நடவடிக்கை எடுக்க சட்டப்படி அனுமதி உண்டு. இந்த 2 விசாரணைகளும் நேர்மையாக, பாரபட்சம் இல்லாமல் நடைபெறவேண்டும்.
எனவே, பணி செய்யும் இடத்தில் பெண்களுக்கு எதிராக பாலியல் கொடுமைகளை தடுப்புச் சட்டத்தின்படி, தற்போது புதிய விசாகா கமிட்டியை தமிழக டி.ஜி.பி. அமைத்துள்ளார். அந்த விசாகா கமிட்டியின் தலைவராக டி.ஜி.பி. ஸ்ரீலட்சுமி பிரசாத் நியமிக்கப்படுகிறார்.
இந்த கமிட்டியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் சூப்பிரண்டு பி.கண்ணம்மாள், மேலாளர் எம்.கனகா, துணை போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ராமதாஸ், ஐகோர்ட்டு பெண் வக்கீல் வல்சலாகுமாரி ஆகியோர் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கமிட்டி, சட்டத்தின்படி அனைத்து தரப்பினருக்கும் வாய்ப்புகள் வழங்கி 2 வாரத்துக்குள் தன்னுடைய விசாரணையை முடித்து அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும். ஒருவேளை இந்த விசாரணைக்கு கூடுதல் காலஅவகாசம் வேண்டும் என்றால், இந்த ஐகோர்ட்டை விசாகா கமிட்டி அணுகலாம்.
அதேபோல, பதிவு செய்யப்பட்ட கிரிமினல் வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் சட்டப்படி விசாரணை நடத்த வேண்டும். பெண் போலீஸ் சூப்பிரண்டு கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு 4-ந் தேதி கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில், ஐ.ஜி. முருகன் மீது தமிழக டி.ஜி.பி., பணி விதிகளின்படி துறை ரீதியான நடவடிக்கையை எடுக்கவேண்டும்.
மேலும், இதுபோல உயர் அதிகாரிகள் மீது பாலியல் புகார்கள் வருவதை தடுக்கவும், பெண் அதிகாரிகள், பெண் ஊழியர்களை பாதுகாக்கவும், அனைத்து உயர் அதிகாரிகளின் அலுவலகத்துக்கு உள்ளே கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்று தமிழக தலைமை செயலாளருக்கு பரிந்துரை செய்கிறேன்.
இதன்படி இந்த வழக்குகள் எல்லாம் முடித்து வைக்கப்படுகிறது. இந்த உத்தரவின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை போலீஸ் தரப்பில் தாக்கல் செய்வதற்கு வசதியாக, இந்த வழக்கு விசாரணையை வருகிற மார்ச் 6-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.