தமிழக அரசு அறிவிப்பு கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை உள்பட 5 பேருக்கு மணிமண்டபம்
சட்டசபையில் நேற்று விதி எண் 110-ன் கீழ் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:-
முல்லைப்பெரியாறு அணையை தனது சொந்த செலவில் கட்டி தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள் பாசன வசதி பெற வழிவகுத்த கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் பிறந்த நாளான ஜனவரி 15-ந் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும்.
பவானி ஆற்றின் வாய்க்கால் களை வெட்டிய காலிங்கராயனின் நினைவை போற்றுகின்ற வகையில் ஆண்டுதோறும் தை மாதம் 5-ந் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும்.
சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக் கோனின் வீரத்தையும், வரலாற்றையும் உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் சென்னை, எழும்பூரில் அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள வீரன் அழகுமுத்துக் கோனின் உருவச்சிலைக்கு ஆண்டுதோறும் ஜூலை 11-ந் தேதி அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சிறப்பிக்கப்படும்.
இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், சிறந்த தமிழ் அறிஞரும், முன்னாள் மேலவை தலைவர் ம.பொ.சிவஞானத்தின் தமிழ் தொண்டினை போற்றிடும் வகையில், சென்னை, தியாகராயநகரில் அமைக்கப்பட்டுள்ள ம.பொ.சிவஞானமின் உருவச்சிலைக்கு அவரது பிறந்த நாளான ஜூன் 26-ந் தேதி அன்று அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சிறப்பிக்கப்படும்.
தமிழ் அன்னைக்கு தனது பாடல்களால் மாலை சூட்டி அழகு பார்த்த கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு, அவர் பிறந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம், தேரூரில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபமும், அதிலேயே ஒரு நூலகமும் அமைக்கப்படும்.
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் வீரத்தை பெருமைப்படுத்தும் விதத்தில், பெரும்பிடுகு முத்தரையருக்கு திருச்சி மாவட்டத்தில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபமும், அதிலேயே ஒரு நூலகமும் அமைக்கப்படும்.
இரட்டைமலை சீனிவாசன் பிறந்த இடமான மதுராந்தகம் அருகில் உள்ள கோழியாளம் கிராமத்தில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் உருவச் சிலையுடன் கூடிய நினைவு மண்டபமும், அதிலேயே நூலகமும் அமைக்கப்படும்.
விவசாயிகளின் நலனைக் காக்க பரம்பிக்குளம் ஆழியாறு அணைக்கட்டு திட்டம் தொடங்க காரணகர்த்தாவாக இருந்தவர் வி.கே.பழனிசாமி கவுண்டர். அவருக்கு சிறப்பு செய்யும் விதமாக அவர் பிறந்த இடமான கோயம்புத்தூர் மாவட்டம் வேட்டைக்காரன் புதூரில் உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபமும், அதிலேயே ஒரு நூலகமும் ரூ.1 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
நீதிக்கட்சியின் வைரத் தூண் என்று அழைக்கப்பட்ட ஏ.டி.பன்னீர்செல்வத்துக்கு திருச்சி மாவட்டத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் உருவ சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைத்து, ஆண்டுதோறும் அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.
நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையத்தில் காவிரியின் குறுக்கே தடுப்பணை அமைத்து 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பயன்பெற ராஜ வாய்க்கால் ஏற்படுத்திய அல்லாள இளைய நாயகரை பெருமைப்படுத்தும் வகையில், அவருக்கு ஜேடர்பாளையத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் குவிமாடத்துடன் உருவச்சிலை அமைக்கப்படும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒண்டிவீரன் மணிமண்டபத்தை ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பதுடன், அந்த வளாகத்தில் ஒரு நூலகமும் அமைக்கப்படும்.
தூத்துக்குடி மாவட்டம் கவர்ணகிரியில் அமைந்துள்ள வீரன் சுந்தரலிங்கனார் மணிமண்டபத்தை ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பதுடன், ஒரு நூலகமும் அதிலேயே இந்த அரசு அமைக்கும். இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.