தாக்குதலுக்கு நாங்கள் காரணமா? பாக்., மறுப்பு
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலுக்கு பாக்., தான் காரணம் என இந்தியா குற்றம்சாட்டி வரும் நிலையில், பாகிஸ்தான் அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவப்படை வீரர்கள் சென்ற வாகனம் மீது, வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட வாகனத்துடன் வந்து மோதிய பயங்கரவாதி, அதனை வெடிக்கச் செய்தான். இதில் ராணுவ வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்சி இ முகம்மது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி தான் இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு காரணம் என இந்திய உள்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியது. இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த தாக்குதலுக்கு பாக்., காரணம் என இந்தியா குற்றம்சாட்டி உள்ளதை பாக்., திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது குறித்து பாக்., அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இது மிகவும் வேதனை அளிக்கக் கூடிய நிகழ்வு. உலகில் எங்கு பயங்கரவாத செயல்கள் நடந்தாலும் பாக்., எப்போதும் அதை கண்டித்துள்ளது. எவ்வித விசாரணையும் இன்றி இந்த தாக்குதலுக்கு காரணம் பாக்., தான் என இந்திய அரசும், இந்திய மீடியாக்களும் குற்றம்சாட்டி வருவதை ஏற்க முடியாது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.