புல்வாமா தாக்குதலை அரசியல் ஆக்கினால் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: காங்கிரஸ்
காஷ்மீரில் இயங்கி வரும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள் பாதுகாப்பு படையினர் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி பெருத்த சேதங்களை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் புலவாமா மாவட்டத்தில் கடந்த 14-ந் தேதி ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி நடத்திய தற்கொலை தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலை அரசியலாக்கினால் அதனை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டர்கள் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி, இது தொடர்பாக மேலும் கூறுகையில், “
நமது தேசம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மோசமான பயங்கரவாதத் தாக்குதலை எதிர்கொண்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் அனைவரும் சுயகட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். இந்த சம்பவத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதோ, தரக்குறைவான விமர்சனங்களைக் கூறுவதோ கூடாது. இந்த நேரத்தில் எவரது தனிப்பட்ட பெயரையோ அல்லது அரசியல் கட்சியின் பெயரையோ கூறி இதில் அரசியலை இழுக்க நான் விரும்பவில்லை.இந்த பயங்கரவாதத் தாக்குதலை வைத்து அரசியல் ஆதாயம் தேட முயற்சித்தாலோ அல்லது மற்றவர்களை விமர்சிக்க இதனைப் பயன்படுத்தினாலோ மக்கள் அதனை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்” என்றார்.