Breaking News
வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி

மோர்தசா தலைமையிலான வங்காளதேச கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டித் தொடரில் முதல் இரண்டு ஆட்டங்களிலும் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி டுனெடினில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் காலின் முன்ரோ 8 ரன்னிலும், மார்ட்டின் கப்தில் 29 ரன்னிலும் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தாலும், மிடில் வரிசை வீரர்கள் அணியை தூக்கி நிறுத்தினர். ஹென்றி நிகோல்ஸ் (64 ரன்), ராஸ் டெய்லர் (69 ரன்), பொறுப்பு கேப்டன் டாம் லாதம் (59 ரன்) அரைசதம் அடித்தனர். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 330 ரன்கள் குவித்தது.

பின்னர் கடின இலக்கை நோக்கி ஆடிய வங்காளதேச அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. 9.5 ஓவர்களில் 40 ரன்னுக்குள் அந்த அணி 4 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது. இதன் பின்னர் சபிர் ரகுமானின் (102 ரன்) ‘கன்னி’ சதத்தால் அந்த அணி சரிவில் இருந்து ஓரளவு மீண்டது.

வங்காளதேச அணி 47.2 ஓவர்களில் 242 ரன்கள் சேர்த்து ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் நியூசிலாந்து அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி 6 விக்கெட்டுகளை சாய்த்தார். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி ஒரு நாள் போட்டி தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

அடுத்து இவ்விரு அணிகள் மோதும் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது.

8 ஆயிரம் ரன்களை கடந்து ராஸ் டெய்லர் சாதனை

இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் 69 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அவர் 43 ரன்கள் எடுத்து இருந்த போது ஒரு நாள் போட்டியில் 8 ஆயிரம் ரன்களை எட்டிய 2-வது நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றார். ஏற்கனவே நியூசிலாந்து முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளமிங் 8 ஆயிரம் ரன்களை கடந்து இருந்தார். அத்துடன் 8 ஆயிரம் ரன்களை வேகமாக எட்டிய 4-வது வீரர் என்ற சிறப்பையும் ராஸ் டெய்லர் (203 இன்னிங்சில்) பெற்றார். இந்த இலக்கை வேகமாக எட்டிய வீரர்கள் பட்டியலில் இந்திய கேப்டன் விராட்கோலி (175 இன்னிங்ஸ்), தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் (182 இன்னிங்ஸ்), இந்திய முன்னாள் கேப்டன் கங்குலி (200 இன்னிங்ஸ்) ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர்.

218-வது ஒரு நாள் போட்டியில் ஆடிய ராஸ் டெய்லர் 20 சதம், 47 அரைசதங்களுடன் மொத்தம் 8,026 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சிறப்பையும் ராஸ் டெய்லர் பெற்றார். இதற்கு முன்பு முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளமிங் 8,007 ரன்கள் எடுத்ததே நியூசிலாந்து வீரரின் அதிகபட்சமாக இருந்தது. ஸ்டீபன் பிளமிங் ஐ.சி.சி. உலக லெவன் அணிக்காக ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் விளையாடி 30 ரன்கள் எடுத்து இருப்பதையும் சேர்க்கும் போது அவரது ஒட்டு மொத்த ரன்கள் 8,037 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

34 வயதான ராஸ் டெய்லர் கூறுகையில், ‘ஸ்டீபன் பிளமிங்கின் சாதனையை கடந்த போது ரசிகர்கள் எழுந்து நின்று அளித்த வரவேற்பை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன். கிரிக்கெட் ஆட்டத்தை நான் இன்னும் அனுபவித்து விளையாடி வருகிறேன். மேலும் சில ஆண்டுகள் என்னால் தொடர்ந்து விளையாட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது’ என்றார்.

தரவரிசையில் நியூசிலாந்து முன்னேற்றம்

ஒரு நாள் போட்டிக்கான அணிகளின் தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது. இதன்படி இங்கிலாந்து அணி (126 புள்ளிகள்) முதலிடத்திலும், இந்திய அணி (122 புள்ளிகள்) 2-வது இடத்திலும் மாற்றமின்றி தொடருகின்றன. வங்காளதேசத்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்ற நியூசிலாந்து அணி (112 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி 3-வது இடத்தையும், தென் ஆப்பிரிக்க அணி (111 புள்ளிகள்) ஒரு இடம் சரிந்து 4-வது இடத்தையும் பெற்றுள்ளன.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.